பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தமிழக அரசு படுதோல்வி அடைந்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Chennai: பெண்களை பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருப்பது ஒரு அரசுக்கு அழகல்ல - தான் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதை திரு எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போன்று, பெரம்பலூரிலும் பெண்கள் சிலர் கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக வழக்கறிஞர் அருள் என்பவர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது, முக்கிய அரசியல்வாதி ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஓட்டல் அறையில், பெண்கள் சிலர் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக புகார் எழுந்தது. அதன்பேரில் அருள் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
“பொள்ளாச்சி விபரீதம்” முடியும் முன்பே “பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார்” இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளிவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற போர்வையில் பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை காட்டி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏ.வின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவரங்களை ஆடியோ டேப் உரையாடல் ஆதாரத்துடன் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கையும் அ.தி.மு.க அரசு சில காரணங்களுக்காக மிகவும் பொறுப்பற்ற முறையில் காலம் தாழ்த்தி - அலட்சியமாக நடத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. 250 க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்வு சூறையாடப்பட்ட ஒரு வழக்கினை இவ்வளவு மோசமாக ஒரு அரசு கையாண்டு, பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையோ, ஆர்வமோ காட்டாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மாணவ மாணவியரின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பார்த்து அஞ்சிய அ.தி.மு.க அரசு, “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது” என்று ஒரு அரசு ஆணையை வெளியிட்டது. அதைக்கூட முறையாக வெளியிடாமல் நீதிமன்றத்தின் கண்டனத்தை வாங்கிக்கொண்டது அ.தி.மு.க அரசு.
முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து - ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார். “பொள்ளாச்சி” விவகாரத்தில் அ.தி.மு.க அரசின் தோல்வி - இப்போது பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது. அ.தி.மு.க அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - தங்களின் கண்ணியத்திற்கு ஆபத்து என்ற உணர்வு ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கே ஏற்பட்டுள்ளது. பெண்களை பயத்திலும் பதற்றத்திலும் வைத்திருப்பது ஒரு அரசுக்கு அழகல்ல - தான் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல என்பதை திரு எடப்பாடி பழனிசாமி உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.