This Article is From Jan 04, 2020

'நாம் தமிழர் கட்சியின் MLA வேட்பாளர்கள் இம்மாதத்திற்குள் அறிவிக்கப்படுவார்கள்' : சீமான்

2021 சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

'நாம் தமிழர் கட்சியின் MLA வேட்பாளர்கள் இம்மாதத்திற்குள் அறிவிக்கப்படுவார்கள்' : சீமான்

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வேலப்பன் சாவடியில் நடைபெற்றது.

2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை வேலப்பன் சாவடியில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். 

பொதுக்குழு கூட்டத்தின்போது, குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும், இசுலாமியப் பெண்களின் நலனென்று பெயரில் கொண்டு வரப்பட்டு திணிக்கப்பட்டிருக்கிற முத்தலாக் மசோதாவையும், மாநில அதிகாரத்தின் வரம்புக்குள் தலையிடும் ஆட்தூக்கிச் சட்டமான தேசியப் புலனாய்வு முகாமையையும் (NIA) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், மத்திய அரசின்  எதேச்சதிகாரப்போக்கும், தவறானப் பொருளாதார முடிவுகளும் தொடர்ந்தால் அது நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடும். ஆகவே, பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசித்து நாட்டைத் தற்காத்துக் கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு விரைந்து செய்ய வேண்டும், தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையிலே நடத்த வேண்டும்  என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ftg40l1g

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறியதாவது-

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 10 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. இதனால் இந்த தேர்தல் எங்களுக்கு பின்னடைவு அல்ல. இம்மாத இறுதிக்குள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சொந்த தொகுதியில் அவர்கள் ஒன்றரை ஆண்டுகள் களப்பணியில் ஈடுபடுவார்கள்.

சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பு அளிக்கப்படும். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டன. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர, அமமுக, நாம் தமிழர் கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டன. மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்தலைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி, ஒரேயொரு வெற்றியைத்தான் பதிவு செய்தது. அதே நேரத்தில் அமமுக, 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக கூட்டணியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றின.

8vooa0sg

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். தற்போது நடந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளோம். இது ஒரு மாபெரும் வளர்ச்சி. நாங்கள் ஒரு தேர்தலை இப்படித்தான் பார்க்கிறோம். இதில் எத்தனை இடங்களில் வெற்றியடைந்தோம் என்று நாங்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இரு பெரும் திராவிடக் கட்சிகள் தங்கள் முழு பணப் பலத்தை இரைத்து இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் அவர்களை எதிர்த்துக் களமாடி இவ்வளவு வாக்குகளைப் பெற்றதே பெரிய வெற்றிதான். இன்னொன்று, நாங்கள் கீழ்நிலை உள்ளாட்சி இடங்களில் கணிசமான இடங்களில் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், அது பற்றியெல்லாம் ஊடகங்கள் சொல்வதே இல்லை” என்றார்.

.