லாக்கப் மரணம் சர்ச்சைக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் (Representational)

Chennai:

தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், மேலும், முக்கிய மாற்றமாக நான்கு நகரங்களில் புதிய காவல்துறை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தந்தை, மகன் இருவரும் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணம் தொடர்பான விசாரணையைத் தடுக்க முயன்றதாக அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் உள்ளிட்டோரும் மாற்றப்பட்டுள்ளனர். 

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான விசாரணையை தடுக்க முயன்றதாக மாஜிஸ்திரேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும், நேற்று மாலையிலே, நில அபகரிப்பு சிறப்பு பிரிவுக்கு பிரதாபனும், தடை அமலாக்க பிரிவில் குமாரும் நியிமிக்கப்பட்டனர். 

தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். 

இவை தவிர்த்து, மீதமுள்ள 39 இடமாற்றங்களும் வழக்கமானவை தான் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறியதாவது, இந்த இடமாற்றங்கள் தூத்துக்குடி வரம்பிலிருந்து வந்தவை அல்ல. இந்த இடமாற்றங்கள் வழக்கமானவை தான், பல அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இதில், நீண்ட காலமாக தாமதமான பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதில், சென்னை காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக பிரேமானந்த் சின்ஹா மாற்றப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக லோகநாதனும், திருப்பூர் காவல் ஆணையராக கார்த்திகேயனும் மாற்றப்பட்டுள்ளனர். 

இதில், சென்னை காவல் ஆணையராக இருந்த ஏ.கே,விஸ்வநாதன் செயலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி தந்தை-மகன் மரணம் தொடர்பான விசாரணையில் நேற்றைய தினம் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த புதிய பணியிட மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பான மாஜிஸ்திரேட் தலைமையில் நடந்த விசாரணை அறிக்கையில், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் தினமும் தானாகவே அழியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 1TB ஹார்டு டிஸ்க்கில், போதுமான அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருந்தும், தானாக அழியும் வகையில் செட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவங்களை நேரில் பார்த்த காவலர் விளக்கம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தந்தை, மகன் இருவரும் லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், லத்தியும், மேஜையும் ரத்தம் படிந்திருந்ததாக காவலர் ரேவதி மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளார். 

அவர் என்னை அந்த லத்தியையும், மேஜையையும் கைப்பற்றும் படி வலியுறுத்தினார். ஆனால், அங்கிருந்து காவலர்கள் எனக்கு அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதில், ஒரு காவலரிடம் அவரது லத்தியை ஒப்படைக்கும்படி கேட்ட போது, அவர் காவல் நிலையத்தின் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றுவிட்டார்.

மற்றொரு காவலரான மகாராஜன், அவரது லத்தி சொந்த ஊரில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த வாக்குமூலத்தை மாற்றி தனது காவலர் குடியிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த காவலர்கள் இந்த சம்பவங்களை தங்களது மொபைல் போன்களில் பதிவு செய்து நீதிமன்ற ஊழியர்களை மிரட்டுகின்றனர். அதனால் நிலைமை எங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லாததால், நாங்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பினோம் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், துணை காவல் கண்காணிப்பாளர் சி.பிரதாபன், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் காவலர் மகாராஜன் உள்ளிட்ட 3 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.