This Article is From Aug 18, 2020

‘அதற்கும் நீதி கிடைக்க வேண்டும்!’- ஸ்டெர்லைட் தீர்ப்பையொட்டி சீமான் சுட்டிக்காட்டும் விஷயம்

"ஆலையை திறக்க அனுமதி மறுப்பு என்ற தீர்ப்பை போல் 13 பேரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைத்தால் சரியாக இருக்கும்"

‘அதற்கும் நீதி கிடைக்க வேண்டும்!’- ஸ்டெர்லைட் தீர்ப்பையொட்டி சீமான் சுட்டிக்காட்டும் விஷயம்

"ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள்திரள் அறவழிப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கும் விரைவில் நீதி கிடைத்திட வேண்டும்”

ஹைலைட்ஸ்

  • ஸ்டெலைட் ஆலையை தமிழக அரசு மூடி உத்தரவிட்டுள்ளது
  • இதற்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
  • அந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கூறிய நீதிமன்றம், 815 பக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, மேல்முறையீடு செய்யும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேந்தா நிறுவனம் கோரியதையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தீர்ப்பு வந்த பின்னர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். பல ஆண்டுகளாக பல கட்ட மக்கள்  போராட்டத்திற்கு பிறகு 13 பேர் உயிரை விலையாக கொடுத்து இந்த தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அறவழியில் போராடிய மக்களைச் சுட்டுக்கொன்ற காவலர்கள், காரணமான அரசு அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆலையை திறக்க அனுமதி மறுப்பு என்ற தீர்ப்பை போல் 13 பேரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைத்தால் சரியாக இருக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள்திரள் அறவழிப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கும் விரைவில் நீதி கிடைத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 


 

.