This Article is From Oct 31, 2018

படேல் சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

பிரதமர் மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாகும். இதனை தினமும் பார்வையிட 10,000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படேல் சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரு மடங்கு உயரமானது படேலின் சிலை.

Kevadiya:

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சாது பேட் என்ற சிறு தீவில் சர்தார் சரோவர் அணை அருகே, இந்த சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை' அமைந்துள்ளது. இது குஜராத்திற்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை வருகை புரிய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை, உலகின் மிகப்பெரிய நினைவுச் சின்னமாகும். ஒற்றுமைக்கான சிலையை பார்வையிட தினமும் 10,000 சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்தார் வல்லபாய் படேலின் சிலையை சுற்றி சத்பூரா மலைத் தொடரின் வசீகரிக்கும் அழகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த சிலையின் உட்புறம் இரும்பு மனிதர் வாழ்வினை சித்தரிக்கும் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலையின் வெளிப்புறத்தை மட்டும் பார்வையிடுபவர்களுக்கான கட்டணம் ரூ.120(ஒரு நபருக்கு). கேலரியை பார்வையிடுபவர்களுக்கு ரூ.350 கட்டணம் ஆகும்.

குஜராத் முதலமைச்சர் அலுவலகத் தகவலின்படி, நாளை முதல் சுற்றுலா பயணிகள் ‘ஒற்றுமைக்கான சிலை'யை பார்வையிடலாம் என்று தெரிகிறது.

.