This Article is From Apr 06, 2020

ரூ.30,000 கோடி ‘படேல் சிலையை’ விற்க ஆன்லைன் விளம்பரம்; அப்புறம் நடந்தது…

OLX தளத்திலிருந்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது. 

ரூ.30,000 கோடி ‘படேல் சிலையை’ விற்க ஆன்லைன் விளம்பரம்; அப்புறம் நடந்தது…

கடந்த 2018 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியால் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை’ திறந்து வைக்கப்பட்டது

ஹைலைட்ஸ்

  • கடந்த சனிக்கிழமை ஆன்லைனில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது
  • அது குறித்த தகவலை செய்தித்தாள் ஒன்று பிரசுரித்துள்ளது
  • அதைத் தொடர்ந்துதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
Rajpipla:

குஜராத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அம்மாநிலத்தில் 30,000 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரக் குறிப்பில் அந்த நபர், கொரோனா வைரஸை எதிர்கொள்ள மருத்துவ செலவுகளுக்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் விற்பனையில் வரும் தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் உஷ்ணமடைந்த குஜராத் போலீஸ், அடையாளம் தெரியாத அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியால் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை' திறந்து வைக்கப்பட்டது. அப்போதிலிருந்து பல லட்சம் சுற்றுலாவாசிகள் படேலின் சிலையைப் பார்வையிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில் அதை விற்க ஆன்லைனில் விளம்பரம் கொடுத்த நபருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது குறித்து போலீஸ் தரப்பு, “யாரென்று தெரியாத நபர் ஒருவர், கடந்த சனிக்கிழமை OLX இணையதளத்தில், 30,000 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட ஒற்றுமைக்கான சிலையை விற்க விளம்பரம் செய்துள்ளார். இந்த விற்பனையில் வரும் பணம் கொரோனா வைரஸை எதிர்கொள்ள மருத்துவ உபகரணங்களுக்கும், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளுக்கம் பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்,” எனத் தெரிவித்துள்ளது. 

இது குறித்துப் போலீஸ் அதிகாரி பி.டி.சௌத்ரி, “இந்த விவகாரம் குறித்த செய்தியை முதலில் செய்தித் தாள் ஒன்று பிரசுரித்துள்ளது. அதைப் பார்த்த படேல் சிலை நிர்வாகம், காவல் துறையை அணுகியது. இதைத் தொடர்ந்து 4 பிரிவுகளின் கீழ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று விளக்கினார். 

OLX தளத்திலிருந்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டுவிட்டது. 

படேல் சிலையை நிர்வகித்து வரும் நிர்வாகம், “அரசு சொத்துகளை விற்க யாருக்கும் உரிமை கிடையாது. இருப்பினும் ஒரு அடையாளம் தெரியாத நபர் OLX தளத்தில் இப்படிப்பட்ட விளம்பரத்தைப் பதிவிட்டு அரசின் பெயருக்கு பங்கம் விளைவித்து, மக்களை தவறாக வழி நடத்தப் பார்த்துள்ளார். சர்தார் படேலை முன்னுதாரணமாகப் பார்க்கும் பல கோடி மக்களின் உணர்வுகளை, அவரின் செயல் புண்படுத்தும் விதத்தில் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது. 

.