This Article is From Dec 18, 2018

ராகுலை முன்மொழிந்ததற்கு பிற்காலத்தில் ஸ்டாலின் வருத்தப்படுவார்: தமிழிசை

ராகுலை முன்மொழிந்ததற்கு பிற்காலத்தில் ஸ்டாலின் வருத்தப்படுவார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ராகுலை முன்மொழிந்ததற்கு பிற்காலத்தில் ஸ்டாலின் வருத்தப்படுவார்: தமிழிசை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

அதன்பிறகு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று நான் முன்மொழிகிறேன். மேடையில் உள்ள மற்ற தலைவர்களும் இதனை முன்மொழிய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். ராகுல் காந்தியே வருக, நாட்டிற்கு நல்லாட்சியை தருக என்று கூறினார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் திமிழசை செளந்தரராஜன்,

அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வருவார் என மிகப்பெரிய அறிவிப்பை அறிவித்துள்ளார் அண்ணன் ஸ்டாலின். இதனை மேடையில் இருந்த மற்ற கூட்டணி கட்சி தலைவர்களும் ரசிக்கவில்லை.

இன்று காலை இவர்கள் கூட்டணி வைத்துள்ளோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளிடமிருந்தே தெளிவான மறுப்புகள் வந்துள்ளன. பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்ததை காங்கிரஸ் கட்சியினரே ஏற்பார்களா என்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆனாலும், ரஃபேல் விவகாரத்தில் பொய் பரப்புரை மேற்கொள்ளும் காங்கிரஸை கண்டித்து வரும் 19 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

.