This Article is From Apr 08, 2019

பொள்ளாச்சி மாணவி கொலை வழக்கு: ஒருதலை காதலன் கைது!

கோவையில் 2 நாட்களாக காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவர், கொடூரமாக கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று கண்டெடுக்கப்பட்டார்.

பொள்ளாச்சி மாணவி கொலை வழக்கு: ஒருதலை காதலன் கைது!

கைது செய்யப்பட்ட நபர், பிரகதியை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.

Chennai:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி, கொடூரமாக கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்த பிரகதி (19) என்ற மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த பிரகதி கடந்த 2 நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பொள்ளாச்சி அருகே சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் அது காணாமல் போன மாணவி பிரகதி என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பேரில், பிரகதியின் உறவினரான சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சதீஷ், மாணவி பிரகதியின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனிடையே சதீஷ்க்கு வேறோரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும், பிரகதி மீதான காதலில் சதீஷ் தீவிரமாக இருந்துள்ளார்.

திருமணம் ஆன பின்பும் கூட, பிரகதியை பெண் கேட்டு மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்றள்ளார் சதீஷ். ஆனால் இந்த முறையும் பிரகதியின் பெற்றோர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதனிடையே பிரகதிக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. வரும் ஜூன் 13ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெள்ளியன்று மாணவி பிரகதி கல்லூரி விடுதியை விட்டு வழக்கம்போல வீட்டிற்கு செல்ல வந்த நிலையில் சதீஷ் அவரை தனது காரில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது வேறு ஒருவருடன் திருமண் நடைபெற உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ் மாணவியை கொடூரமான முறையில் கழுத்து அறுத்துக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சமீப காலமாக, பெண்கள் இது போல ஒருதலை காதலர்களால் கொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுனத்துக்கு உளவியலாளர் சித்ரா அரவிந்த் கூறும்போது, ஆண்களுக்கு அவர்களது வீட்டில் உரிய அன்பு மற்றும் அக்கறை கிடைப்பதில்லை. அதனாலே அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்து வருகிறது.

இதனால், ஒரு பெண் தன் காதலை ஏற்க மறுத்துவிட்டால் அவர்களால் அதனை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த மனநிலை அவர்களுக்கு வன்மத்தை தூண்டுகிறது. இந்த மனநிலையில் இருப்பவர்கள் இறுதியில் கொலை செய்யும் நிலைக்கு சென்று விடுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

.