This Article is From May 17, 2019

“சில விஷயங்கள்…”- கோட்சே குறித்த சர்ச்சைக்கு ஆனந்த் மகேந்திராவின் ‘பளார்’ கருத்து!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே- கமல் சொன்ன கருத்து

“சில விஷயங்கள்…”- கோட்சே குறித்த சர்ச்சைக்கு ஆனந்த் மகேந்திராவின் ‘பளார்’ கருத்து!

நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார்'- பிரக்யா தாகூர் பேசியது

New Delhi:

தேசப் பிதா காந்தி, அவரைக் கொன்ற கோட்சே, ஆகிய இருவர் குறித்து கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் கருத்துகள் தொடர்ந்து விவாதப் பொருளாகா மாறி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்ட போது, ‘முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பலரும் கண்டனங்களும், ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர் இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்துக்கு பதில் தெரிவித்தார்.

அதில், ‘நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்' என்று அவர் கூறினார். பிரக்யா தாகூரின் இந்த கருத்துக்கு பாஜக தலைமை எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார். 

இப்படி தொடர் பேசு பொருளாக மாறியுள்ள இந்த விஷயம் குறித்து ஆனந்த் மகேந்திரா, “கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா, மகாத்மாவின் பூமியாகத்தான் இருந்து வருகிறது. உலகம் தன் மாண்பை இழந்து தவித்தபோது, அதற்கு ஒளி விளக்காக இருந்தவர் மகாத்மா. நாம் ஏழைகளாக இருந்ததால் நம் மீது பலர் இரக்கப்பட்டனர். ஆனால் பல கோடி பேருக்கு மகாத்மா முன்னுதரணமாக இருந்ததால், நாம் செல்வந்தர்களாகவே உணர்ந்தோம். சில விஷயங்கள் புனிதமாகவே நீடிக்க வேண்டும். இல்லையென்றால் தாலிபான் போல மாறி, சிலைகளை உடைத்தெறியலாம்” என்று உருக்குமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

.