“திரையுலகில் ஜாம்பவான்… அரசியலில் LKG..!”- கமல் பற்றி கிண்டல் செய்த செல்லூர் ராஜூ

"ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் அவர் ஒரு எல்கேஜி மாணவன்"

“திரையுலகில் ஜாம்பவான்… அரசியலில் LKG..!”- கமல் பற்றி கிண்டல் செய்த செல்லூர் ராஜூ

“சினிமாவைப் பொறுத்த வரையில் கமல்ஹாசன் ஒரு ஜாம்பவான்"

திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பற்றி, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய செல்லூர் ராஜூ, “சினிமாவைப் பொறுத்த வரையில் கமல்ஹாசன் ஒரு ஜாம்பவான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு உலக நாயகன். நடிப்புலகச் சக்கரவர்த்தி. 

ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் அவர் ஒரு எல்கேஜி மாணவன். இன்னும் சொல்லப் போனால், எல்கேஜி-ஐக் கூடத் தாண்டவில்லை” என்று கிண்டல் செய்யும் தொனியில் பேசியுள்ளார். 

சுமார் 150 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. நாள்தோறும் சென்னையில் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை பலர் கண்டித்து வருகின்றனர். 

அந்த வகையில் கமலும், “காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. 

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?” என்று விமர்சனம் செய்திருந்தார். 

இந்நிலையில் செல்லூர் ராஜூ, கமலை கேலி செய்யும் நோக்கில் பேசியுள்ளார்.