"சத்தியமா விடவே கூடாது' - சாத்தான்குளம் விவகாரம் பற்றி ரஜினி கருத்து

ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் காலமானார்.

இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • சாத்தான்குளம் சம்பவம் இந்தியளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன
  • போலீஸ் கஸ்டடியில் தந்தை - மகன், ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம்
  • சிபிஐயிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடியின் சாத்தான்குளத்தில் காவலர்களின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த தந்தை மகனான, ஜெயராஜ் - பென்னிக்ஸ் விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த், தன் கருத்தை காட்டமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார். 

தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி, “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துக் கண்டித்துப் பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது,” என்று கருத்திட்டு #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹாஷ் டேக்கையும் இணைத்துள்ளார். 

கடந்த ஜூன் 19 ஆம் தேதி, தூத்துக்குடியின் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் மீறி, தங்களின் கடையை சுமார் 15 நிமிடம் கூடுதலாக திறந்து வைத்தனர் என்று குற்றம் சாட்டி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவல் துறை கைது செய்தது. போலீஸ் தரப்பு, ‘ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களை அவர்கள் மிரட்டவும் செய்தனர். சாலையில் படுத்து உருண்டதால் அவர்களின் உடலில் காயம் ஏற்பட்டது,' என்று கூறியிருந்தது. 

காவல் துறையால் கைது செய்யப்பட்ட இருவரும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது. உடலில் உள்ளேயும் வெளியேயும் காயங்கள் இருந்ததாக சொல்லும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் குடும்பத்தினர், பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதிகளிலும் ரத்தம் வடிந்ததாக அதிர்ச்சிப் புகார்களை சுமத்தியுள்ளனர். 

ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ், மருத்துவமனையில் இறந்துவிட, அவரின் தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் காலமானார். இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது.

முன்னதாக வழக்கு குறித்து நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணையின்போது கான்ஸ்டபிள் மகாராஜன், “நீங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது,” என்று மிரட்டியுள்ளதாக நீதிமன்றத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதை சுட்டிக்காட்டி நீதிமன்றம், துணை எஸ்.பி சி.பிராதபன், கூடுதல் துணை எஸ்.பி டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் மீது நீதிமன்ற அவமதிப்புக்கு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் நீதிமன்றம், ‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதற்கு முகாந்திரம் உள்ளது,' என்று கறாராக குறிப்பிட்டுள்ளது.