This Article is From Jan 04, 2020

மகாராஷ்ரா அமைச்சரவையில் வெடித்தது மோதல்!! அதிருப்தி முஸ்லிம் அமைச்சர் ராஜினாமா!

அமைச்சர் அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடன் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், அதன்பின்னர் பிரச்னை முடிவுக்கு வரும் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே அப்துல் சத்தாருடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mumbai:

மகாராஷ்டிர அமைச்சரவையில் முக்கிய துறை ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த முஸ்லிம் அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
 

சட்டமன்ற தேர்தலுக்கு சற்று முன்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அப்துல் சத்தார் சிவசேனாவில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்கப்படாமல் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். 

அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷின்டே 'சத்தாரின் ராஜினாமா கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை ' என்று தெரிவித்துள்ளார்.

சிவசேனாவின் இன்னொரு தலைவரான சஞ்சய்  ராவத், சத்தாரிடம் முதல்வர் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தார். 'அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போதெல்லாம், அமைச்சர்களுக்கு தாங்கள் விரும்பிய பொறுப்பு கிடைக்காமல் போகலாம். இதனால் அவர்கள் அதிருப்தி அடைவார்கள். ஆனால் இது மகா விகாஸ் அகாதி என்னும் கூட்டணி அரசாகும். சிவசேனா அரசு அல்ல. வெளிக் கட்சியில் இருந்து சிவசேனாவுக்கு அவர் புதிதாக வந்தார். இருப்பினும், அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டோம்' என்று ராவத் கூறியுள்ளார். 

உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அப்துல் சத்தார் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் சத்தார், சமீபத்தில் மகாராஷ்டிர அமைச்சரவையில் இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக சத்தாரின் மகன் சமீர் சத்தார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். 'எனக்கு தந்தையின் ராஜினாமா குறித்து ஏதும் தெரியாது. அவர்தான் இதுபற்றி பேச வேண்டும். இதுபற்றி அவர் விரைவில் பேசுவார் என்பதை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். பொறுத்திருந்து பார்ப்பதுதான் நல்லது' என்று அவர் கூறினார். 
 

mgg5v25

மகாராஷ்டிர அமைச்சரவையில் தேசியவாத காங்கிரசுக்கு முக்கிய துறைகள் கிடைத்துள்ளன. 

மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பதற்காக சிவசேனாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. அங்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. 

அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு கேபினட் அந்தஸ்து வழங்காமல் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மற்றும் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 34 பேர் ஆகியோர், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கடந்த 30-ம்தேதி அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

இதன்பின்னர் தேசியவாத காங்கிரசை சேர்ந்த பீட் மாவட்ட எம்.எல்.ஏ. பிரகாஷ் சோலங்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சர் பொறுப்பு வழங்காததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் மறுத்திருந்தார்.

முன்னதாக பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே, மகாராஷ்டிர கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். '3 கட்சிகள் மகாராஷ்டிராவில் ஒன்றாக கூட்டணி அரசை அமைத்துள்ளன. ஆனால் வெவ்வேறு திசையில் செல்லும் சக்கரங்களைக் கொண்ட ஆட்டோ ரிக்சாவைப் போன்ற இந்த அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை' என்று அவர் கூறினார்.

சுழற்சி முறையில் முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா வைத்த கோரிக்கையை பாஜக நிராகரித்தது. இதையடுத்து மகாராஷ்டிராவில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த பாஜக - சிவசேனா கூட்டணி முடிவுக்கு வந்தது. 

(With inputs from ANI)

.