This Article is From Feb 18, 2020

ஷாகின்பாக் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் நியமித்த உச்சநீதிமன்றம்

Shaheen Bagh: எந்த சட்டத்திற்கு எதிராகவும் போராடுவதற்கு அடிப்படை உரிமை உண்டு. ஆனால், சாலைகளை முடக்காமல் அவர்கள் போராட்டங்களைத் தொடரக்கூடிய மாற்று பகுதி என்ன? என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஷாகின்பாக் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்கள் நியமித்த உச்சநீதிமன்றம்

சிஏஏவுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்

New Delhi:

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி ஷாகின்பாக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் உயர் அதிகாரி ஒருவரை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்ஜே மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் வஜாஹாத் ஹபிபுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டக்காரர்களைச் சந்தித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில், வேறொரு இடத்தில் தங்கள் போராட்டத்தைத் தொடர அவர்களை வற்புறுத்த முயற்சிப்பர்.

எந்த சட்டத்திற்கு எதிராகவும் போராடுவதற்கு அடிப்படை உரிமை உண்டு. ஆனால், சாலைகளை முடக்காமல் அவர்கள் போராட்டங்களைத் தொடரக்கூடிய மாற்றுப் பகுதி என்ன? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

இதற்குப் பதிலளித்த டெல்லி காவல்துறை, வழக்கறிஞர், அவர்கள் வேறு இடத்தை தேர்வு செய்யலாம் என்று கூறினார். டெல்லி ஷாகின்பாக் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் இரண்டு மாதங்களுக்கு மேலாக முகாம் அமைத்து சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக ஷாகின் பாக் பகுதியைச் சுற்றி காவல்துறையினர் முன்வைத்த தடுப்புகளால் தங்களது அன்றாட பணிகளுக்கு மிகுந்து பாதிப்பு ஏற்படுவதாகவும், போக்குவரத்திற்குச் சிரமமாக இருப்பதாகவும், இது போன்ற தொடர் போராட்டத்தால் தங்களது தொழில் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாக சில வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

எதற்குமே ஒரு எல்லை என்பது உண்டு, நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமென்றால், போராடுங்கள்.. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், நாளை மற்றொரு தரப்பினர் மற்றொரு பகுதியில் இதேபோல போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. அதனால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யலாம். சாலைகளை முடக்கினால், பொதுமக்கள் எங்குச் செல்வார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள், அவர்கள் போராட்டத்தைத் தொடரலாம். ஆனால், தினமும் அதிகளவிலான மக்கள் கூட்டத்தினருடன் சாலையில் போராடுவது சரி இல்லை என்றார். 

இதைத்தொடர்ந்து, தங்களுக்கு சில காலம் அவகாசம் அளிக்குமாறு நீதிபதியிடம் போராட்டக்காரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். 

தொடர்ந்து, போலீசார் தரப்பில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்துகின்றனர் என நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்தே, உச்ச நீதிமன்றம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்களை நியமித்தது. 

.