This Article is From Sep 04, 2018

வேதாந்தாவுக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: அவசர விசாரணைக்கு மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

வேதாந்தாவுக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: அவசர விசாரணைக்கு மறுப்பு!
New Delhi:

தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடுத்து, அதை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரியிருந்தது தமிழக அரசு. இந்நிலையில், அவசர விசாரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதை அவசர வழக்காக கருதி விசாரிக்கும் படியும் தமிழக அரசு கோரியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்னர் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. பெருந்திரளான மக்கள் போராட்டம், மே மாதம் 22 ஆம் தேதி 100-வது நாளை எட்டியது. 100-வது நாளன்று அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று கருதி தூத்துக்குடி ஆட்சியர், 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இருந்தும் மக்கள் அறவழியில் போராடுவோம் என்று கூறினர். 100-வது நாளன்று ஊர்வலமாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராடும் மக்களுக்கும் இடையில் மோதல் உண்டானது. மக்கள் கூட்டத்தைக் கலைக்க, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இதனால், ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த நாளும் துப்பாக்கி சூடு நடத்தியது போலீஸ். இதனால், மொத்தம் 13 பேர் பலியாகினர்.

இதையடுத்து, கடந்த மே மாதம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

இதனால், ஸ்டெர்லைட் நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைப்பெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தான் தமிழக அரசு அவசர வழக்காக கருதி விசாரிக்கும்படி கோரியது. ஆனால், அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் தற்போது மறுத்துள்ளது.

.