This Article is From Dec 13, 2018

ம.பி-யில் கமல்நாத் முதல்வர்… ராஜஸ்தானில் தொடரும் குழப்பம்!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மூத்த நிர்வாகி கமல்நாத் (Kamal Nath) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது

‘யார் முதல்வராக பொறுப்பேர்ப்பார் என்பது குறித்து ஒரு குழப்பமும் இருக்காது. அது சுமூகமாக நடக்கும்’, ராகுல்

New Delhi:

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யார் முதல்வராக பொறுப்பேற்பார்கள் என்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முடிவெடுப்பார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ், தனிப் பெரும்பான்மை பெறவில்லை. மாறாக, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவில் காங்கிரஸ், ம.பி-யில் ஆட்சி அமைக்கப் போகிறது. காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மூத்த நிர்வாகி கமல்நாத் (Kamal Nath) முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது. 

அதேபோல, மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமான இன்னொரு காங்கிரஸ் நிர்வாகி ஜோதிராதித்யா சிந்தியா, துணை முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. நேற்று NDTV சார்பில் அவரிடம், ‘நீங்கள் முதல்வராக பொறுப்பேற்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டதற்கு, “கண்டிப்பாக… முதல்வராக வாய்ப்பு கொடுத்தால் அதைப் பெருமையாக நினைப்பேன்” என்றார்.

ராஜஸ்தானைப் பொறுத்தவரை, மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் மற்றும் 2 முறை முதல்வராக இருந்த அஷோக் கெலோட் ஆகிய இருவருக்கும் இடையில் முதல்வராவதில் கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கெலோட், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக நமக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன.

ராஜஸ்தானில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் சச்சின் பைலடுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மூத்தவர் என்ற முறையிலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தும் பார்க்கும் போது, கெலோட்டுக்கும் முதல்வராக மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையை சமாளிக்க, இருவரில் ஒருவருக்கு தேசிய அளவில் முக்கியப் பதவி கொடுக்கப்படும் என்றும், ஒருவருக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து பேசிய ராகுல், ‘யார் முதல்வராக பொறுப்பேர்ப்பார் என்பது குறித்து ஒரு குழப்பமும் இருக்காது. அது சுமூகமாக நடக்கும்' என்று கூறினார். 

.