This Article is From Dec 19, 2018

1984 சீக்கிய கலவரம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு… பதில் சொல்ல மறுத்த ராகுல்!

1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, சஜ்ஜன் குமார், குற்றவாளி என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

1984 சீக்கிய கலவரம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பு… பதில் சொல்ல மறுத்த ராகுல்!

1984 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். (கோப்புப் படம்)

New Delhi:

கடந்த 1984 ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, காங்கிரஸ் நிர்வாகி சஜ்ஜன் குமார், குற்றவாளி என டெல்லி உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராகுல், ‘1984 கலவரம் குறித்து நான் ஏற்கெனவே கருத்து கூறிவிட்டேன். எனவே, மீண்டும் அது குறித்து நான் பேச மாட்டேன். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பு என்பது மோடி அரசு, விவசாயக் கடனை ரத்து செய்ய மறுக்கிறது என்பதைப் பற்றித்தான். அது குறித்து மட்டும் கேள்வி எழுப்புங்கள்' என்று கறாராக பதில் கூறிவிட்டார்.

சீக்கிய கலவரம் குறித்த வழக்கில் கீழ்நிலை நீதிமன்றம் ஒன்று சஜ்ஜன் குமாரை விடுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை வாசிக்கும் போது, 'கலவர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் அதிகாரத்தில் திளைத்து வந்தனர். ஆனால், அச்சுறுத்தல் எதற்கும் அஞ்சாமல் வழக்கை தீர்க்கமாக முன்னெடுத்துச் சென்ற ஜகதீஷ் கவுரை நாங்கள் பாராட்டுகிறோம்.

sajjan kumar

 

சஜ்ஜன் குமார், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் சரணடைய வேண்டும். கலவரத்தின் போது நடந்த சம்பவங்கள் பல மட்டங்களில் இன்னும் பிரதிபலிக்கின்றன' என்றது.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை, அவரது சீக்கிய பாதுகாவலர்கள், 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர். இதையடுத்து சீக்கியர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் 2,800 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2,100 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த விஷயம் தொடர்பாக முன்னர் பேசிய ராகுல், ‘சீக்கிய கலவரம் என்பது ஒரு துயர சம்பவம். அது மிகவும் வலிமிக்க சம்பவம். அதே நேரத்தில், பலர் அந்தக் கலவரத்தில் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஈடுபட்டது என்று கூறுகின்றனர். அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை' என்று தெரிவித்திருந்தார்.

 

.