This Article is From Sep 09, 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். வாராக்கடன்களையும், தொழிலதிபர்களுக்கு கொடுத்த கடனையும் முறையாக வசூலித்தால் வங்கிகள் லாபத்தோடு இயங்கும் என்றும்  வங்கி ஊழியர் சங்கம் கூறியுள்ளது. 

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்.

பொதுத்துறை வங்கி இணைப்பு அறிவிப்பை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் பொருளாதார மந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கியும், யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கியும், இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும் என்று அறிவித்தார். 

மேலும் பேசிய அவர், பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட பின்னர், 2017-ல் மொத்தம் இருந்த 27 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12-ஆக குறைந்து விடும். பொதுத்துறை வங்கிகளை வலிமைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய வங்கிகளின் நிர்வாகக்குழுவில் இருப்பவர்கள் பொது மேலாளர்கள் மற்றும் உயர் பொறுப்புக்கு உயர்த்தப்படுவார்கள். 

வாராக்கடன்களை வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, மொத்தம் ரூ.8.65 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தற்போது ரூ.7.90 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. ரூ.1.21 லட்சம் கோடி வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

இந்நிலையில், வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை குறைவால் தனியார் நிதி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். வாராக்கடன் குறைந்திருப்பது தொடர்பான புள்ளி விவரங்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளது என்று வங்கி ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக லாபம் ஈட்டமுடியுன் என்ற நிதித்துறை அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், பொதுத்துறை வங்கிகள் இனி மொத்தம் 12 மட்டுமே செயல்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்ததை வங்கி ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. 

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். வாராக்கடன்களையும், தொழிலதிபர்களுக்கு கொடுத்த கடனையும் முறையாக வசூலித்தால் வங்கிகள் லாபத்தோடு இயங்கும் என்றும்  வங்கி ஊழியர் சங்கம் கூறியுள்ளது. 

இந்நிலையில் பொதுத்துறை வங்கி இணைப்புக்கு எதிரிப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

.