தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு: சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு: சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு: சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாவகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாககடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது எனினும் தமிழகத்தில் வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்ததை தொடர்ந்து, அங்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது, அதுவும் தளர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்கு பரவல் அளவு சற்று குறைந்துள்ளது. 

எனினும், தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறித்து, மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய உயர்மட்ட மருத்துவக்குழு நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய மருத்துவக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இதன்பின்னர் தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி மூலம் 18 பேர் குணமடைந்ததால் ரூ.2 கோடி செலவில் பிளாஸ்மா வங்கி நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது,  தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது, மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். 5,000 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையங்கள் தயாராகி வருவதாக கூறினார்.

மேலும், தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பிளாஸ்மா வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து, கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவம் நல்ல பலனை அளித்துள்ளது. அதனால், சித்த மருத்துவ சிகிச்சை மையங்களை ஊக்குவித்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.