This Article is From Dec 19, 2019

டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!

மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 10 நகரங்களில் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.

டெல்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது!!

கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன.

New Delhi:

குடியுரிமை சட்டத்தை கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாட்டின் பல்வேறு நகரங்களில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.  இருப்பினும், டெல்லி உள்பட 3 முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். லக்னோவில் கும்பலாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி செங்கோட்டையில் இருந்து பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் காணப்படுகிறது. 

கர்நாடகத்தின் சில பகுதிகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை, சென்னை, புனே, ஐதராபாத், நாக்பூர், புவனேஸ்வர், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் இன்று நடைபெறவிருந்தாலும் பெரும்பாலான இடங்களில் போலீசார் அனுமதி மறுத்திருக்கின்றனர்.

இந்த செய்தி குறித்த 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்…

  1. டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இருமுறை மோதல் ஏற்பட்டது. செங்கோட்டையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்திருக்கின்றனர். பேரணியாக செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  1. போலீசார் அனுப்பியுள்ள அனுமதி மறுப்பு கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் மக்கள் இன்று டெல்லியில் கூடுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

  1. பெங்களூருவில் இன்று காலை 2 இடங்களில் 11 மணிக்கு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போராட்டத்தில் கற்கள் வீசப்படும் அபாயம் உள்ளதால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.  டிசம்பர் 21-ம்தேதி இந்த உத்தரவு அமலில் இருக்கும்

  1. உத்தரப்பிரதேசத்தில் 144 தடை உத்தரவு இன்று போடப்பட்டுள்ளதாகவும், யாரும் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

  1. நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டத்தை நடத்துவதற்கு பல்வேறு சமூக அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக சமூக வலைதளங்களின் வழியே அழைப்பு விடுக்கப்படுகிறது.

  1. மாலை 4 மணிக்கு மும்பையிலும், 3 மணிக்கு சென்னையிலும், போபாலில் 2 மணிக்கும், ஐதராபாத்தில் 4 மணிக்கும், புனேவில் 4.30-க்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. கொல்கத்தாவில் கடந்த 3 நாட்களாகவே குடியுரிமை சட்டத்தை கண்டித்தும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன்று மதியம் மேற்கு வங்கத்தில் பேரணி நடைபெறுகிறது. பஞ்சாப், கேரளா, மேற்கு வங்க முதல்வர்கள் தங்களது மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

  1. ஆப்கன், பாகிஸ்தான், வங்க தேசத்திலிருந்து 2014 க்கு முன்பு, மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை சட்டம்  இந்திய குடியுரிமையை வழங்குகிறது. இதில் மத பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

  1. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அதனை திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், சட்டத்தை ரத்து செய்ய மருத்து விட்டது. 22-ம்தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

  1. கடந்த வாரம் சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதன்பின்னர் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. அசாம் மாநிலத்தில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமாக காணப்படுகிறது. இங்கு 6 ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரயில்வே, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோரை கண்டதும் சுடுமாறு மத்திய இணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.
.