This Article is From Dec 17, 2019

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!! டெல்லி இந்தியா கேட்டில் பிரியங்கா காந்தி தர்ணா!

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் தடியடி தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இங்கு போலீஸ், மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி இந்தியா கேட் அருகே பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

New Delhi:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில், டெல்லி இந்தியா கேட் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து டெல்லி ஜாமியா மில்லியா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் விதமாக போலீசார் நேற்று தடியடியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. டெல்லியில் போலீஸ், மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

தடியடி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறைந்த அளவு போலீசாரே இந்த வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக டெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது. 

இந்த நிலையில் மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் டெல்லி இந்தியா கேட் அருகே இன்று  தர்ணா போராட்டம் நடைபெற்றத. 

இந்த பிரச்னை தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாளை மதியம் இந்த சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. நேற்று டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கும் போலீஸுக்கும் இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக, மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் டெல்லியில் நேற்றிரவு முதல் மிகவும் பதற்றமான சூழல் காணப்படுகிறது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்கள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “எங்கள் போராட்டம் அமைதியாக நடக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்திருந்தோம். போராட்டத்தில் வன்முறையைக் கையாண்ட யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்கின்றோம். எங்கள் மீது தடியடி நடத்தப்பட்டபோதும், மாணவிகள் மோசமாக தாக்கப்பட்ட போதும் நாங்கள் பொறுமை காத்தோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர். 

வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த போரட்டங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 27 பேருக்குக் காயம் ஏற்பட்டு, கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 

.