This Article is From Mar 12, 2019

வாரணாசியா… புரியா… பிரதமர் மோடி களமிறங்கப் போகும் தொகுதி எது..?

Lok Sabha elections 2019: ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பிக்கும் லோக்சபா தேர்தலின் 7- ஆம் கட்டமான, மே 19 ஆம் தேதிதான் வாரணாசியில் வாக்குப்பதிவு நடக்கும்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்

ஹைலைட்ஸ்

  • இரண்டு தொகுதிகளில் பிரதமர் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை
  • 2014-ல், மோடி, வாரணாசி மற்றும் வடோதராவில் போட்டியிட்டார்
  • வாரணாசியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்
New Delhi:

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடைத்து, அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இந்த முறை உத்தர பிரதேச மாநில வாரணாசியில் இருந்து போட்டியிடுவாரா அல்லது வேறு தொகுதியிலிருந்து தேர்தலை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பிரதமர் மோடி, வாரணாசி போலவே உள்ள இன்னொரு கோயில் நகரமான புரியை இந்த முறை லோக்சபா தேர்தலுக்குத் தேர்ந்தெடுப்பார் என்று சில வாரங்களுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால், அந்தத் தகவலை நம்மிடம் பேசிய பாஜக மேலிட தலைவர்கள் மறுத்துள்ளனர். 

சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து ஏ.என்.ஐ நடத்திய நேர்காணலின் போதும், பிரதமர் மோடி சூசகமான பதிலையே சொன்னார். 

அதே நேரத்தில், பாஜக முக்கிய புள்ளிகள் பிரதமர் மோடி, இந்த முறையும் வாரணாசியில் இருந்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் வாரணாசியைத் தவிர்த்து இன்னொரு தொகுதியில் மோடி போட்டியிடுவாரா, அப்படி போட்டியிடும் தொகுதி, ஒடிசாவின் புரியாக இருக்குமா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. 

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, வாரணாசி மற்றும் குஜராத்தின் வடோதரா தொகுகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். பின்னர் அவர் வாரணாசி தொகுதியில் மட்டும் தனது எம்.பி பதவியை தக்கவைத்துக் கொண்டார். 

வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸின் அனந்த் ராய் ஆகியோரை விட மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் மோடி வென்றார்.

அதே நேரத்தில், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இந்த முறை பாஜக, பெரிய தாக்கத்தை ஏற்படுத்த நினைப்பதாகவும், ஆகவே பிரதமர் மோடி மூன்று மாநிலங்கலுக்கு உட்பட்ட ஒரு தொகுதியில் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

பாஜக சார்பில் யார் யார் எந்தெந்த இடங்களில் நிறுத்தப்படுவர் என்பது குறித்து முடிவெடுக்க பாஜக-வின் மத்திய தேர்தல் கமிட்டி இந்த வாரம் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. அந்த சந்திப்புக்குப் பிறகு, மோடி போட்டியிடும் தொகுதி குறித்து விடை கிடைக்கும். 

ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பிக்கும் லோக்சபா தேர்தலின் 7- ஆம் கட்டமான, மே 19 ஆம் தேதிதான் வாரணாசியில் வாக்குப்பதிவு நடக்கும். அதைத் தொடர்ந்து மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

.