This Article is From Feb 15, 2020

அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருபோதும் பயங்கரவாதி என்று அழைக்கவில்லை: பிரகாஷ் ஜவடேகர்

10 நாட்களுக்கு முன்னதாக அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று அழைத்ததாக அனைத்து தேசிய ஊடகங்களிலும் செய்தி வெளியானது

அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருபோதும் பயங்கரவாதி என்று அழைக்கவில்லை: பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியுற்றது.

Pune:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தான் 'பயங்கரவாதி' என்று அழைத்தது இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பூனேவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, நான் ஒரு போதும் இது போன்ற செயல்களை செய்தது இல்லை என திட்டவட்டமாக கூறிய அவர், இரண்டாவதாக டெல்லி தேர்தல் முடிவுகளில் பார்க்க வேண்டியது காங்கிரஸ் முற்றிலுமாக தோல்வி பெற்றதை தான் என்று அவர் கூறியுள்ளார். 

பாஜக எம்.பி பர்வேஷ் வர்மா அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று கூறியதுடன், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். டெல்லி தேர்தல் நெருங்கும் சமயத்தில் பர்வேஷ் வர்மாவின் இந்த சர்ச்சை பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதேபோல், மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு என்டிடிவி உட்பட அனைத்து தேசிய ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோ இங்கே.. 

அதில், டெல்லியில் வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து விலகி இருக்க ஒரு காரணம் இருக்கிறது. கெஜ்ரிவால் அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு, நான் தீவிரவாதியா? என்று கேள்வி எழுப்புகிறார். ஆம் நீங்கள் தீவிரவாதி தான், அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது. நீங்கள் ஒரு அராஜகவாதி என்று நீங்களே கூறியுள்ளீர்கள்; ஒரு அராஜகவாதிக்கும் பயங்கரவாதிக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குறித்து ஜன.25ம் தேதி பிரச்சாரத்தின் போது பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா இந்த வார்த்தையை முதலில் பயன்படுத்தினார். அதில், கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், "ஷாகின் பாக் வகை" மக்கள் வீதிகளைக் கைப்பற்றுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். தெற்கு டெல்லியில் உள்ள ஷாகின் பாக், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும்.

தேர்தல் நடந்த முடிந்த ஒரே நாளில் மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ ஓ.பி.சர்மா மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சிக்கிறார். அவர் கூறும்போது, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஊழல்வாதி. அவர் பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுகிறார். இந்திய ராணுவம் குறித்து கேள்வி எழுப்பி பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாகளர் போல் செயல்படுகிறார். 'துக்டே- துக்டே' கூட்டத்தை ஆதரிக்கிறார். பயங்கரவாதி என்று அவரை குறிப்பிடுவதே சரியானதாக இருக்கும் என்று அவர் கூறினார். 

டெல்லி தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர்கள் பலரும் தேர்தல் ஆணையத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டனர். வகுப்புவாத குற்றச்சாட்டுகள் முதல், துரோகிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியது, டெல்லி முதல்வர் குறித்து விமர்சித்தது என ஏராளமான குற்றச்சாட்டுகள் பாஜக மீது எழுந்தது. 

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றியது. 

.