This Article is From Apr 01, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம்: கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிட மாற்றம்!!

பாலியல் வழக்கு தொடர்பாக புகார் அளித்தவரின் பெயரை வெளியிட்ட காரணத்தால் எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரம்: கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிட மாற்றம்!!

புதிய எஸ்.பி.யாக சுஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Chennai:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் புகார் அளித்தவர்களின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டியராஜன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. 

இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை கோவை எஸ்.பி. பாண்டியராஜன் வெளியிட்டார். இது வழக்கு விசாரணைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

தங்களது பெயரையும் வெளியிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்ட மற்றவர்களும் புகார் அளிக்க முன்வரவில்லை என்று கூறப்பட்டது. இதற்கிடையே வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரும் தமிழக அரசின் அரசாணையிலும் பாதிக்கப்பட்டவரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்.பி. பாண்டிய ராஜன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் காத்திருப்போர் பட்டியிலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே வழக்கை சிபிஐ விசாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்கை இன்னும் சிபிசிஐடி அதிகாரிகள்தான் விசாரித்து வருகின்றனர். 

.