This Article is From Apr 30, 2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி!

Pollachi case: சிபிசிஐடி அமைப்பின் எஸ்.பி., நிஷா பார்த்திபன், வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை 40 விட்னஸிடம் அறிக்கை வாங்கியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி!

சிபிஐ, இந்த மாத தொடக்கத்தில், சிபிசிஐடி-யிடமிருந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

பொள்ளாச்சி(Pollachi) பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரித்து வந்த தமிழக சிபிசிஐடி, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அமைப்பிடம் ஒப்படைத்தது. சிபிஐ, இந்த மாத தொடக்கத்தில், சிபிசிஐடி-யிடமிருந்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

சிபிசிஐடி அமைப்பின் எஸ்.பி., நிஷா பார்த்திபன், வழக்கு தொடர்பான விசாரணையில் இதுவரை 40 விட்னஸிடம் அறிக்கை வாங்கியுள்ளார். தடயவியல் சோதனைகளுக்கும் பல பொருட்களை அவர் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ-யிடம் ஏப்ரல் 29 ஆம் தேதி ஒப்படைத்துவிட்டோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில்(Pollachi case) பல இளம் பெண்களை ஓர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்து தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அடுத்தடுத்து வீடியோ வெளியானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ அமைப்பு, கடந்த ஒரு மாதமாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து வந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு முன்னர், 8 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் ஆட்சிபுரியும் அதிமுக-வுக்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டிய மாநில எதிர்கட்சிகள், நீதிமன்ற கண்காணிப்பிலான விசாரணையை கோரின. இதையடுத்து கடந்த மார்ச் 13 ஆம் தேதி, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

மார்ச் மாதமே இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணி உள்ளிட்ட 8 பேர் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. மார்ச் மாதமே சிபிஐ விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்ட போதும், ஏப்ரல் முதல் வாரம் வரை தமிழக அரசு தரப்பிலிருந்து முறையான ஆவணம் கொடுக்கப்படவில்லை. இதனால் விசாரணை தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. 

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் பெண், பிப்ரவரி 24 ஆம் தேதி, காவல் துறையிடம் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் மீது புகார் அளித்தார். அந்தப் பெண்ணிடம் இந்த 4 பேரும் அத்துமீறியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணிடம் இருந்த தங்க சங்கிலியைப் பறித்தது மட்டுமல்லாமல், அத்துமீறியதை நால்வரும் சேர்ந்து வீடியோ எடுத்துள்ளதாகவும், விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியே விட்டுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. 

அதைத் தொடர்ந்து புகார் அளித்த பெண்ணின் அண்ணனை தாக்கியதாகக் கூறி பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. 

‘பொள்ளாச்சி கும்பலால் அதிகம் பாதிக்கப்பட்டது கல்லூரி பெண்கள்தான். முதலில் சமூக வலைதளங்கள் மூலம் இளம் பெண்களிடம் நட்பாக பழகும் அந்த கும்பல், ஒரு கட்டத்திற்கு மேல் பெண்களை உணவகத்துக்கு அழைப்பது, பயணத்துக்கு அழைப்பது என்பதை செய்துள்ளது. பெண்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பாலியல் அத்துமீறல்களில் அந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. அதை வீடியோவாக எடுத்து, பெண்களை மிரட்டியும் வந்துள்ளது' என்று தமிழக போலீஸ் பிரச்னை குறித்து விளக்குகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. 


 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.