This Article is From Apr 28, 2019

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க கோரிய மனு மீது பதிலளிக்குமாறு, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளிடம் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இந்த சம்பவங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கோவையில் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் 60க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது. அதேபோல், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டதாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தை, பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மீனாட்சி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கக் கோரும் மனு குறித்து பதிலளிக்க, தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி நகர காவல் ஆய்வாளர் ஆகியோரும் வரும் ஜூன் 7-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.