This Article is From Mar 27, 2020

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்: பிரதமர் மோடி

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்: பிரதமர் மோடி

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்: பிரதமர் மோடி

ஹைலைட்ஸ்

  • ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்: பிரதமர்
  • ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைப்பு
  • ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைப்பு
New Delhi:

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். 

இதன்காரணமாக நாட்டில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. மேலும்,  மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன. 

அந்தவகையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி தரப்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் வங்கி சிறந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும், நிதி செலவைக் குறைக்கும், நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிலதிபர்களுக்கும் பயணளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீட்டு கடன் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

வீட்டுக்கடன் வட்டி மட்டுமின்றி தொழில்துறையினர் பெற்ற கடன்களுக்கான வட்டியும் குறைய வாய்ப்புள்ளது. வட்டி குறைப்பு காரணாக மாத தவணைகளின் எண்ணிக்கையும் குறையக்கூடும். 

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் 3 மாதத்திற்கு இஎம்ஐ கட்ட தேவையில்லை. எல்லா வகையான கடன்களின், தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார்.

முன்னதாக, நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாரும் பசியில் இருக்கக் கூடாது என்பதற்காக ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு சார்பில் சுமார் 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, இன்று ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

.