This Article is From May 30, 2019

பதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

பாஜகவின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியானது இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Narendra Modi: நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக இன்று மாலை பதவியேற்கிறார்.

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மற்றும் அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்கின்றனர்.
  • டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை.
  • வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி, அமித்ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்பு.
New Delhi:

மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். மாலை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

17-வது மக்களவைக்காக நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா மட்டும் தனியாக 303 இடங்களை வென்று, அதீத பெரும்பான்மையுடன் இன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் மோடி. கடந்த முறை போலவே, இம்முறையும் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரையும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

pnu1q1vg

விழாவில் வங்கதேசம் அதிபர் அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெக்கோவ், மொரீஷியஸ் அதிபர் பிரவிந்த் குமார் ஜுகுநாத், நேபாள பிரதமர் ஷர்மா ஒளி, மியான்மர் அதிபர் வின் மின்ட், தாய்லாந்து அதிபர் சார்பில் சிறப்பு பிரதிநிதி கிரிசாடா பூன்ராச், பூடான் பிரதமர் ஷெரிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இது தவிர பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு பிரதிநிதிகளும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தரவுள்ளனர்

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம், புதச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஆகியோரும் விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4kfm24go

இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். இதில் மோடியுடன் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

(With inputs from Agencies)

.