மிகப்பெரிய அளவிலான அகதிகள் இடம்பெயர்வின் பின்னணியில் நேரு - லியாகத் அலி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
New Delhi: பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை நடந்ததாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவை மறைமுகமாக விமர்சித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அவரது உரை பரபரப்பை ஏற்படுத்தி வரகிறது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக உரை நிகழ்த்திய பிரதமர் மோடி அதற்கு ஜவகர்லால் நேரு, இந்திய பிரிவினை, 1975-ல் ஏற்பட்ட நெருக்கடி நிலை, 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் உள்ளிட்டவற்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
குடியரசு தலைவர் உரையின் மீதான விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் இன்று பேசியதாவது-
பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. இந்த பிரிவினைக்கு பின்னர் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். அந்த துன்பங்களை நம்மால் கற்பனையிலும் எண்ணிப் பார்க்க முடியாது.
1950-ல் நேரு - லியாகத் அலி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் யாரும் பாகுபாட்டுடன் நடத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரு போன்ற மிகப்பெரிய மதசார்பற்ற நபர், தொலை நோக்கு சிந்தனை கொண்டவர் அந்த ஒப்பந்தத்தில் அனைத்து குடிமக்களும் பாகுபாட்டுடன் நடத்தப்பட மாட்டார்கள் என்று ஏன் குறிப்பிடவில்லை. அதற்கு நிச்சயம் காரணம் இருக்க வேண்டும்.
சிறுபான்மையினர் என்ற வார்த்தையை நேரு ஏன் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்?. அதற்கான பதிலையும் அவர் அளித்திருக்கிறார். ஒருமுறை அவர் அசாம் முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'இந்து அகதிகளுக்கும் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிந்து கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
1950-ல் இதே நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, 'பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு புகலிடம் தேடி வந்தவர்களுக்கு நிச்சயம் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கு சட்டம் வழிவகை செய்யாவிட்டால் அதனை மாற்ற வேண்டும்' என்று பேசியிருக்கிறார்.
1953-ல் மக்களவையில் பேசிய நேரு, 'கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களிடம் அதிகாரிகள் ஆவணங்களை கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் எல்லாம் நேருவை பிரிவினைவாதியாக காட்டுகின்றதா என்பதை நான் அறிய விரும்புகிறேன். நேரு இந்து முஸ்லிம்களிடையே பாகுபாடு காட்டினாரா? இந்து நாட்டை அவர் விரும்பினாரா?
இவ்வாறு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் இன்று பேசினார்.