“நீங்க எடுத்த நடவடிக்கை போதாது…”- FATF அறிக்கையால் Pakistan மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கிறது!

FATF Report - கடந்த ஆண்டு ஜூன் மாதம், FATF அமைப்பு, பாகிஸ்தானை க்ரே பட்டியலில் சேர்த்தது.

தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பது மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது கட்டுபாடுகளை விதிக்காமல் இருப்பது குறித்து FATF அமைப்பு முன்னரே பாகிஸ்தானை ‘க்ரே’ (Grey) பட்டியலில் வைத்திருந்தது

ஹைலைட்ஸ்

  • FATF, பாகிஸ்தானை அறிக்கை வெளியிட்டு சாடியுள்ளது
  • FATF, பாகிஸ்தானுக்கு பலகட்ட தீர்மானங்களை முன்வைத்தது
  • பாகிஸ்தான் ஏற்கெனவே, FATF-ன் க்ரே பட்டியலில் இருக்கிறது
New Delhi:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC), தீவிரவாதி ஹபீஸ் சயீத் (Hafiz Saeed) மற்றும் பிற தீவிரவாதிகள் மீது போட்ட தீர்மானத்தை பாகிஸ்தான் அரசு சரிவர நிறைவேற்றவில்லை. அதேபோல ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தய்பா போன்ற தீவிரவாத அமைப்புகள் மீது எடுத்த நடவடிக்கைகளும் போதாது என்று FATF என்னும் தீவிரவாதத்தைக் கண்காணிக்கும் அமைப்பு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்த தகவலை PTI செய்தி நிறுனம் தெரிவித்துள்ளது. 

தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பது மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது கட்டுபாடுகளை விதிக்காமல் இருப்பது குறித்து FATF அமைப்பு முன்னரே பாகிஸ்தானை ‘க்ரே' (Grey) பட்டியலில் வைத்திருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளது FATF. இந்நிலையில்தான், இப்படியொரு தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 13 முதல் 18 ஆம் தேதி வரை பாரீஸில் FATF-ன் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது, பாகிஸ்தானை மீண்டும் க்ரே பட்டியலிலேயே வைத்திருக்க FATF முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம், FATF அமைப்பு, பாகிஸ்தானை க்ரே பட்டியலில் சேர்த்தது. அப்போது அந்த அமைப்பு அக்டோபர் வரை காலக்கெடு தருவதாகவும், அதற்குள் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும், தீவிரவாதிகளுக்கு நிதி கொடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தியது. 

FATF அமைப்பின் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு மறுக்கும்போதும், “பாகிஸ்தானின் அரசு அமைப்புகளுக்கே தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி போவது பற்றியும், நிதி கொடுக்கப்படுவது பற்றியும் சரியான புரிதல் இல்லை. அந்நாட்டின் தனியார் நிறுவனங்களுக்கும் இதில் தெளிவு இல்லை” என்று அந்த அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. 

ஈரான் மற்றும் வடகொரியா நாடுகள் தற்போது FATF அமைப்பின், கறுப்புப் பட்டியலில் இருக்கின்றன. பாகிஸ்தான் சரிவர நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், அந்த நாடும் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என்று இந்திய அரசு தரப்பிடமிருந்து நமக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

Newsbeep

FATF அமைப்பு, பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்த்தால், சர்வதேச நிதி அமைப்பான ஐ.எம்.எப் (IMF), உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்டவைகளிடமிருந்தும் எதிர்மறை தாக்கங்களைப் பெறும். 

இப்படி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டபோதும் பாகிஸ்தான் அரசு தரப்பு சமீபத்தில், லஷ்கர்-இ-தய்பா, ஜமாத்-உத்-தவா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளிடமிருந்த 700-க்கும் அதிகமான சொத்துகளை முடக்கியதைச் சுட்டிக்காட்டியது. அதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், சொத்துகளை முடக்குவது மட்டும் இந்த விவகாரத்தில் போதாது என்று பதிலடி கொடுத்தன. 

With input from PTI, ANI