This Article is From Mar 13, 2020

'ம.பி. எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்' - காங். குற்றச்சாட்டு!!

திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பறந்தனர்.  இதற்கு மறுநாளே 21 எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். நேற்றைய தினம் சிந்தியா பாஜகவில் இணைந்தார். 

சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள், அவர் பாஜகவில் சேர்ந்ததால் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

New Delhi:

மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வோம் என்றும் எச்சரித்துள்ளது. 

மத்தியப் பிரதேச அரசியல் விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, போலீசாரை நோக்கி எம்எல்ஏ ஒருவர் கத்தும் வீடியோ காட்சியை அவர்கள் ஒளிபரப்பினார்கள். இதையடுத்து, வலுக்கட்டாயமாக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினர். 

போலீசாரை நோக்கி கத்தும் எம்எல்ஏவின் பெயர் ஜிது பத்வாரி என தெரியவந்துள்ளது. 

முன்னதாக, திங்களன்று மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர், பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு பறந்தனர். 

இதற்கு மறுநாளே 21 எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர். நேற்றைய தினம் சிந்தியா பாஜகவில் இணைந்தார். 

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் முயற்சிகளுக்கு பாஜகவே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

எம்எல்ஏக்களை ஏமாற்றியோ அல்லது லஞ்சம் தருவதாகக் கூறியோ அவர்கள் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் கட்சிக்குத் திரும்பத் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.

சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்கள், அவர் பாஜகவில் சேர்ந்ததால் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், 'மத்தியப் பிரதேச அரசியல் விவகாரம் தேசப்பிரச்னையாக மாறி விட்டது. எம்.பி., எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் உறவினர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பாஜக செய்வது கிரிமினல் நடவடிக்கை. இதனை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வோம்.

அமைதியான மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலத்தில் குதிரை பேரம் நடப்பதை ஏற்க முடியாது. அதில் எங்கள் எம்எல்ஏக்கள் விழுந்து விட மாட்டார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தற்போது பிணைக் கைதிகளாக இருக்கின்றனர்' என்று தெரிவித்தனர். 

.