This Article is From Jul 25, 2020

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

இதைத்தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்த அனைத்து சகாக்கள் மற்றும் தனிநபர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனையைச் மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Bhopal:

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் தனது ட்விட்டர் பதிவில், அன்பான நாட்டு மக்களே, எனக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, பரிசோதனை மேற்கொண்டேன். அதன் முடிவுகளில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். மருத்துவர்களின் பரிந்துரையின்படி சுயதனிமைப்படுத்திக்கொள்ள உள்ளேன்.

இதனால், என்னுடன் தொடர்பில் இருந்த அனைத்து சகாக்களும், தனிநபர்களும் தொற்று பரவலை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டு, கொரோனா வைரஸ் பரிசோதனையும் மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துக்கொள்கிறேன். 

மத்திய பிரதேச மக்கள் அனைவரும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு சிறு கவனக்குறைவுக் கூட கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கிறது. வைரஸைத் தவிர்ப்பதற்கு நான் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டேன். எனினும், மக்கள் பல காரணங்களுக்காக என்னை சந்தித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை கூட்டத்தை நடத்தவிருந்த முதல்வரின் அனைத்து நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. முதல்வரும் இல்லாத நிலையில், உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, சுகாதார அமைச்சர் விஸ்வாஸ் சாரங் மற்றும் பலர் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்கள் என்று சவுகான் தெரிவித்துள்ளார்.

மிஸ்ராவும் முதல்வர் சவுகானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர், அவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 

தொடர்ந்து, ஆதரவாளர்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் சிகிச்சையில் இருந்தாலும், மாநிலத்தில் வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன் என்று அவர் ஆதரவாளர்களுக்கு உறுதியளித்தார். 

சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டால், கொரோனா வைரஸை குணப்படுத்தி விடலாம். அதனால், யாரும் அச்சமடையத் தேவையில்லை. கடந்த மார்ச்.25ம் தேதி முதல் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்து வருகிறேன். முடிந்த அளவு அதனையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மதிப்பாய்வு செய்ய முயற்சிக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் இதுவரை 26,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 791 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, மாநிலத்தில் 7,500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

.