This Article is From Aug 16, 2019

11 நாட்கள் காஷ்மீர் மிஷனை முடித்துவிட்டு டெல்லி திரும்பினார் அஜித் தோவல்!!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காஷ்மீருக்கு கடந்த 6-ம்தேதி சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.

11 நாட்கள் காஷ்மீர் மிஷனை முடித்துவிட்டு டெல்லி திரும்பினார் அஜித் தோவல்!!

காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடும் அஜித் தோவல்

Srinagar:

11 நாட்களாக காஷ்மீரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தற்போது டெல்லி திரும்பியுள்ளார். 

காஷ்மீரில் நிலைமை சீரடைந்து விட்டால் அங்கு குவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு படைகள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பப் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ம்தேதி நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. 

இதற்கு முன்னெச்சரிக்கையாக காஷ்மீரின் முக்கிய தலைவர்கள், பிரச்னைக்குரிய நபர்கள் உள்ளிட்டோரை வீட்டுச் சிறையில் பாதுகாப்பு படையினர் அடைத்தனர். மக்கள் வெளியே வராத அளவுக்கு சுமார் 50 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. 

காஷ்மீரில் நிலைமை அசாதாரணம் அடைந்ததை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த 6-ம்தேதி காஷ்மீருக்கு சென்றார். அங்கு தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் சோபியான் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட தோவல் உள்ளூர் மக்களிடம் கலந்துரையாடினார். 

இந்த காட்சிகள் இணைய தளங்களில் வைரலாக பரவின. இந்த நிலையில் தனது காஷ்மீர் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பியுள்ளார். 

காஷ்மீரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இணையம் மற்றும் போன் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

“ஜம்மூ காஷ்மீரில் இருக்கும் நிலைமை நாளுக்கு நாள் சீரடைந்து வருகிறது. எனவே அங்கிருக்கும் கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக நீக்கப்படும்” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு கூறியுள்ளது. இதனால் இயல்பு நிலைக்கு விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.