This Article is From Sep 07, 2019

“உறுதியுடன் இருப்போம்”- இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உத்வேகமூட்டிய மோடி!

'இந்த நாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது’

"உங்களோடு எப்போதும் நான் துணை இருப்பேன். உறுதியோடு முன்னேறுங்கள்”

ஹைலைட்ஸ்

  • விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைமையகத்திலேயே உற்சாகமூட்டினார் மோடி
  • இது சாதாரண சாதனை கிடையாது: பிரதமர் மோடி
  • ட்விட்டர் மூலமும் விஞ்ஞானிகளைப் பாராட்டினார் பிரதமர் மோடி
New Delhi/Bengaluru:

இன்று சந்திராயன் 2 விண்கலம், நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும்போது விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது இஸ்ரோ. இதையடுத்து விஞ்ஞானிகளிடம் பேசிய பிரதமர் மோடி, 'இந்த நாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது' என்று உத்வேகமூட்டினார்.

அவர் மேலும், “இது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் போலத்தான். உங்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் அனைவரும் மனித குலத்துக்கும் அறிவியலுக்கும் மிகப் பெரிய பங்காற்றியுள்ளீர்கள். உங்களோடு எப்போதும் நான் துணை இருப்பேன். உறுதியோடு முன்னேறுங்கள்” என்று பேசினார்.

சந்திராயன் 2-வின் விக்ரம் லேண்டர், ஏற்கெனவே இரண்டு பெரிய எல்லைகளைக் கடந்திருந்தது. அது நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 1:30 முதல் 2:30 மணிக்கு இடையில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. விக்ரம் லேண்டரின் தரையிறக்கத்தை நேரலையில் பார்க்க பெங்களூருவில் இருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்குப் பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். 

விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்றும் நிலவின் வளங்கள், நிலவில் இருக்கும் நீர் உள்ளிட்டவை குறித்து ரோவர் ஆராயும் என்றும், மிகவும் அதிக ரெசல்யூஷன் கொண்ட படங்களையும் அது எடுக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. 

.