This Article is From Jan 27, 2020

“ரஜினி பாஜகவுக்கு போனாலும் பரவாயில்ல…”- சூப்பர்ஸ்டாருக்கு நெருங்கிய பிரமுகர் ஓப்பன் டாக்!!

“ரஜினி, பெரியாருக்கு எதிரானவர் என்பது போல தமிழக ஊடகங்கள்தான் கட்டமைக்கின்றன"

“ரஜினி பாஜகவுக்கு போனாலும் பரவாயில்ல…”- சூப்பர்ஸ்டாருக்கு நெருங்கிய பிரமுகர் ஓப்பன் டாக்!!

"அவர் எப்போதும் பெரியாரைப் பெருமளவு மதித்தவர். அவர் பெரியார் குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது..."

‘துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில் ரஜினி, பெரியார் குறித்து பேசியதை அடுத்து, தமிழக அரசியலின் பேசு பொருளாக அது மாறியுள்ளது. ரஜினிக்கு ஆதரவாக வலதுசாரிகள் மற்றும் பாஜகவினர் படையெடுக்க, திமுக, அதிமுக, திராவிட இயக்கங்கள் ரஜினிக்கு எதிராக சீறி வருகின்றன.

ரஜினி, அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜவினரிடம் நெருக்கம் காட்டுவதாலும், இந்துத்துவ தொடர்புடைய பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதாலும், எப்படியும் அவர் பாஜகவின் தமிழக முகமாகத்தான் உருவெடுக்கப் போகிறார் என்று பரவலாக பேசப்பட்டது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் திருவள்ளுவருக்கு, பாஜககாரர்கள் காவிச் சாயம் பூசினார்கள். இதற்கு அடுத்த நாளே செய்தியாள்களுக்கு மத்தியில் பேசிய ரஜினி, “திருவள்ளுவர் ஒரு சித்தர். ஞானி. அவரை எந்த மதத்திற்குள்ளும் அடைக்க முடியாது. திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசப் பார்க்கிறார்கள். அது நடக்காது. எனக்கு பாஜக சாயம் பூசப் பார்க்கிறார்கள். அதுவும் நடக்காது. நாங்கள் சிக்கமாட்டோம்,” என்று அதிரடியாக பேசினார். 

அதே நேரத்தில், பிரதமர் மோடி - அமித்ஷாவின் நெருக்கம் பற்றி ரஜினி, “அர்ஜுனர் கிருஷ்ணரைப் போல செயல்படுகிறார்கள் மோடியும் அமித்ஷாவும். ஆனால், யார் அர்ஜுனர் யார் கிருஷ்ணர் என்றுதான் தெரியவில்லை,” என்று பாஜகவுக்கு ஆதரவாக பேசினார். 

சில வாரங்களுக்கு முன்னர் துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினி, “1971 ஆம் ஆண்டு சேலத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தினார். அதில் கடவுகளான ராமர் மற்றும் சீதா ஆகியோரின் நிர்வாணச் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இது குறித்து எந்த செய்தித் தாள்களும் செய்தி வெளியிடவில்லை. ஆனால், சோ ராமசாமி தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த துக்ளக் இதழ் மட்டும்தான் இது குறித்து செய்தி வெளியிட்டு விமர்சனம் செய்திருந்தது,” என்று சர்ச்சையாக பேசினார். 

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து அது குறித்து விளக்கம் கொடுத்த அவர், “1971 ஆம் ஆண்டு பெரியார் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை, இல்லாத ஒன்றை நான் பேசிவிட்டதாக ஒரு சர்ச்சை கிளப்பப்படுகிறது. நான் அப்படி எதுவும் பேசவில்லை. இதோ என் கையில் ‘அவுட்லுக்' பத்திரிகையை வைத்துள்ளேன். நான் பேசியதற்குச் சான்றாக இந்த பத்திரிகையிலேயே தகவல்கள் உள்ளன. எனவே, பெரியார் குறித்து பேசியதற்கு என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தற்போது, ரஜினிக்கு மிக நெருக்கமானவரும், அவருக்கு ஆலோசகர் போலவும் செயல்பட்டு வரும் தமிழருவி மணியன், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “என்னவோ பாஜகவுடன் நட்புறவுடன் இருப்பதால், ரஜினி அவர்கள் பக்கம் சாய்ந்துவிட்டார் என்பது போல பேசப்படுகிறது. கலைஞர் கருணாநிதி இருந்தபோதே, திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது பாஜக ஒரு இந்துத்துவக் கட்சி கிடையாது. இப்போது மட்டும் ஏன் பாஜகவுடன் சேர்ந்தாலே இந்துத்துவா என்கிறார்கள். இன்னொன்றும் சொல்கிறேன், ரஜினி பாஜகவோடு இணைந்தால் கூட பரவாயில்லை. அதில் எந்த தவறும் இல்லை,” என்று வெளிப்படையாக பேசியுள்ளார். 

தமிழருவி மணியன், பெரியாருக்கு எதிராக ரஜினி பேசியது பற்றி, “ரஜினி, பெரியாருக்கு எதிரானவர் என்பது போல தமிழக ஊடகங்கள்தான் கட்டமைக்கின்றன. அவர் எப்போதும் பெரியாரைப் பெருமளவு மதித்தவர். அவர் பெரியார் குறித்து ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட போது, ‘நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் மிகப் பெரிய ஆத்திகர் பெரியார்' என்றார். இப்படி பெரியார் பற்றி உயரிய எண்ணங்களைக் கொண்டவர் ரஜினி. அவர் ஒரு சாமானியன். அந்த தொனியிலேயே பெரியார் பற்றி துக்ளக் மேடையில் பேசினார்,” என்று விளக்கினார். 

.