New Delhi: அபிஜித் அய்யர் மித்ரா என்பவர் பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒடிசா மாநிலம் கொனாரக்கில் உள்ள சூரிய கோயிலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள சிலைகளை படம் பிடித்த மித்ரா, இது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கடந்த 20-ம் தேதி டெல்லியில் வைத்து, ஒடிசா போலீசாரால் மித்ரா கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவர் கேட்ட ஜாமீனை கீழ் நீதிமன்றம் வழங்கவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அவர் அணுக முயன்றபோது, வழக்கறிஞர்கள் தொடர் போராட்டம் காரணமாக மேல் முறையீடு செய்ய முடியாமல் போனது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டின் மத நம்பிக்கையை களங்கப்படுத்தும் வகையில் நீங்கள் கருத்தை கூறியுள்ளீர்கள். எனவே ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி கூறினார்.
இதற்கு மித்ராவின் வழக்கறிஞர் பதில் அளிக்கையில், தனது கட்சிக்காரரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார். இதற்கு பின்னர் தனது கருத்தை தெரிவித்த நீதிபதி, “ உங்கள் கட்சிக் காரரின் உயிருக்கு ஆபத்து இருக்குமானால், அவருக்கு ஜெயிலை விட பாதுகாப்பு மிக்க இடம் வேறு எதுவும் இல்லை” என்று கூறினார்.
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்.