বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jul 19, 2019

தப்புமா குமாரசாமி அரசு? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு!

கடந்த 2 வாரங்களில் ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 பேரும், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும் ஆவார்கள். இதனிடையே கூட்டணிக்கு ஆதரவு தந்த மேலும், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது ஆதரவை திரும்ப பெற்றனர்.

Advertisement
Karnataka Edited by
Bengaluru:


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணியை சேர்ந்த பல எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் வாஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் அளித்துள்ளார். இதனிடையே, நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்திலே நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டனர்.

நேற்று சட்டப்பேரவை கூடியதும் முதல்வர் குமாரசாமி தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். தமது ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டினார்.

அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் ஆளும் கட்சி தாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவரான ஸ்ரீமந்த் பாட்டீலை பாஜக கடத்தி விட்டதாக அமைச்சர் சிவக்குமார் அதிரடியாக குற்றஞ்சாட்டியதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக ஜனநாயகப் படுகொலையை செய்து வருவதாக கூச்சலிட்டனர். எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் மும்பையில் சிகிச்சை பெறும் படத்தையும் அவரது மருத்துவ ஆவணங்களையும் காட்டி காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

Advertisement

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்ட நிலையில், நேற்று மாலைக்குள் நடத்துமாறு சபாநாயகரை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முதலமைச்சரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் பேரவையிலேயே உறங்கினர். இதற்காக சிலர் தலையணை, படுக்கை விரிப்புடன் பேரவைக்கு வந்திருந்தனர். பெரும்பாலான பாஜக உறுப்பினர்கள் இந்தத் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களும் ஆஜராகி இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உள்ளது.

Advertisement