இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்!!

இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கியதாக நேபாள நாட்டின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்!!

நேபாள அரசின் நடவடிக்கைக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியும் ஆதரவு அளித்திருக்கிறது.

Kathmandu/New Delhi:

இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் கண்டனத்தையும் மீறி, நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்திருப்பது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பான சட்ட திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  அப்போது  மொத்தம் உள்ள உறுப்பினர்கள் 275 பேரில், 258 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மசோதா நிறைவேறுவதற்கு மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அதற்கும் அதிகமான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்த மசோதாவுக்கு நேபாளத்தின் ஆளும் கட்சி, இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் மசோதாவுக்கு எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரசும் ஆதரவு அளித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளது. 

இந்தியா வசம் இருக்கும் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலபானி ஆகியவற்றை உள்ளடக்கியதாக நேபாள நாட்டின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன.

வரைபடம் குறித்து விளக்கம் அளித்த நேபாளம்,1816-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் எல்லைகள் வகுக்கப்பட்டதாக கூறியுள்ளது. இந்தியா - நேபாளம் இடையிலான மேற்கு எல்லையை காலி ஆறு பிரிக்கிறது. இதற்கு கிழக்கே உள்ள பகுதி தனக்கு சொந்தம் என்று நேபாளம் உரிமை கொண்டாடுகிறது. 

சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்த நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி, சீனா மற்றும் இத்தாலி வைரஸை விட, இந்திய வைரஸ் அபாயகரமாக உள்ளதென்று விமர்சித்திருந்தார்.

கடந்த சில வாரங்களாக எழுந்திருக்கும் பிரச்னைகளால் இந்தியா - நேபாளம் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.