This Article is From Aug 07, 2020

புதிய கல்விக் கொள்கை பற்றி பிரதமர் மோடி உரையின் டாப் 5 ஹைலைட்ஸ்!

National Education Policy 2020: "பல ஆண்டுகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பின்னர்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போது இது குறித்து பலர் விவாதித்து வருகின்றனர்"

NEP 2020: '21 ஆம் நூற்றாண்டுக்கு புதிய கல்விக் கொள்கை ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்'

ஹைலைட்ஸ்

  • புதிய கல்விக் கொள்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் கொடுக்கப்பட்டது
  • பள்ளி மற்றும் உயர்கல்வியில் பல மாற்றங்களை இந்தக் கொள்கை கொண்டு வருகிறது
  • இது பற்றி இன்று பிரதமர் மோடி பேசியுள்ளார்
New Delhi:

நாட்டில் கடந்த 34 ஆண்டுகளாக அமலில் இருந்த கல்விக் கொள்கைக்கு பதிலாக, புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இது குறித்த தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் தெரிவித்தது. இந்த கொள்கையின் மூலம் பள்ளி மற்றும் உயர் கல்விப் படிப்புகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கல்விக் கொள்கையைப் பற்றிய உரையில் பிரதமர் மோடி பேசியதாவது, 

1.பழைய கல்விக் கொள்கையானது, என்ன யோசிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கையானது எப்படி யோசிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதில் கவனம் செலுத்துகிறது. 

2.புதிய கல்விக் கொள்கை பற்றி நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதில் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த கொள்கையானது ஒரு சாரருக்குச் சாதகமாக நடந்து கொள்கிறது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. அது மிகப் பெரிய விஷயம். மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது, இந்தக் கொள்கையானது எப்படி அமல் செய்யப்படும் என்பதில்தான் அனைவரின் கவனமும் உள்ளது.

3.மாணவர்களுக்கு தாய் மொழியில் பாடம் கற்றுக் கொடுக்கும்போது, ஒரு பாடத்தின் அர்த்ததை அவர்கள் இன்னும் ஆழமாக புரிந்து கொள்வார்கள். எனவே, இந்தக் கொள்கையின்படி, ஒரு மாணவர், 5 ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கற்பது நல்ல முன்னேற்றம் தரும். ஒரு பாடத்தை முழுமையாகக் கற்கும்போது, எதிர்காலம் உறுதியானதாக இருக்கும்.

4.அப்துல் கலாம், ‘கல்வியின் நோக்கம் என்பது நல்ல மனிதர்களை திறமையுடனும் நிபுணத்துவத்துடனும் உருவாக்குவது. அறிவு பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்' என்பார். புதிய கல்விக் கொள்கையின் மூலம் நாட்டுக்கு நல்ல மாணவர்களை, பணியாளர்களை மற்றும் நல்ல மனிதர்களைக் கொடுக்க முடியும்.

5.பல ஆண்டுகள் ஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பின்னர்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. தற்போது இது குறித்து பலர் விவாதித்து வருகின்றனர். ஒரு ஆரோக்கியமான வாதம் நடைபெற்று வருகிறது. 21 ஆம் நூற்றாண்டுக்கு புதிய கல்விக் கொள்கை ஒரு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கும். 

.