மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பாஜகவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல; ஆனால் அந்த கட்சியோ தன்னை கடவுளைப் போல கருதிக் கொள்கிறது என்று, சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிர அரசியல் விவகாரத்தை தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி வரிசையில் இருந்த சிவசேனா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்து வருகிறது. மத்திய அரசு என்பது பாஜகவுக்கு மட்டுமே சொந்தமான சொத்து அல்ல. ஆனால் அந்தக் கட்சியோ தன்னை ஒரு கடவுளாக கருதிக் கொள்கிறது.
பொறாமை காரணமாக மகாராஷ்டிராவில் அரசியல் சிக்கலை பாஜக ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை ஏற்படுத்திய 4 பேரில் நாங்களும் ஒருவர்.
தேசிய ஜனநாயக கூட்டணியை நாங்கள் சிலமுறை காப்பாற்றியுள்ளோம். நாங்கள் அதனை ஒருபோதும் கைவிட்டது இல்லை. ஆனால் இன்றைக்கு அவர்கள் தங்களை கடவுளைப் போல கருதிக் கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சிக்காக சிவசேனா பாடுபடும்.
மகாராஷ்டிராவில் நிச்சயமாக அரசு அமைக்கப்படும். முதல்வராக சிவசேனாவை சேர்ந்தவர் இருப்பார். குறைந்தபட்ச அடிப்படை செயல் திட்டத்தின் கீழ் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிராவில் ஆட்சியை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற உறுப்பினர்களில் ஆட்சியமைப்பதற்கு 145 உறுப்பினர்களின் பலம் தேவை. இங்கு பாஜக 105 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. அதனுடனான கூட்டணியை முறித்துள்ள 56 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள சிவசேனா, 54 எம்எல்ஏக்களை கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ், 44 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.