மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என சரத்பவார் உறுதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸின் முடிவல்ல என்று மீண்டும் கூறினார். அவரின் முடிவுக்கு நாங்கள் ஆதரவும் தெரிவிக்கவில்லை என்றார்.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மகாராஷ்டிராவில் ஒருங்கிணைந்த ஆட்சி அமைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்ட அஜித்பவாருடன் தொடர்பில் இல்லை என்று கூறிய அவர், அஜித்பவாரை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக தேவேந்திர ஃபட்னாவிஸூம், அஜித்பவாரும் முதல்வர், துணை முதல்வராக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தலைமையில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் பதவியேற்றனர்.
எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற பல காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். கஷ்டங்கள் வந்தாலும் அவை தற்காலிகமானவை தான், மாநில மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதே எனது அனுபவம்" என்றும், தனக்கு இளைஞர்களின் ஆதரவு இருக்கும் வரை, அவர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை என்று கூறினார்.