This Article is From Apr 15, 2020

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை கண்டித்து மும்பையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்! போலீஸ் தடியடி

போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். 

நாட்டிலேயே அதிகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை உள்ளது. 

ஹைலைட்ஸ்

  • மும்பையில் ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர்
  • ஊரடங்கால் உணவுக்கு வழியில்லை. சொந்த ஊர் செல்ல தொழிலாளர்கள் விருப்பம்
  • கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை பாந்த்ராவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
New Delhi:

ஊரடங்கு மே 3-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். 

மும்பையில் ஆயிரக்கணக்கானோர் வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை பார்க்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு செல்ல அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு உணவு வழங்கி வருகிறது. ஆனால் ஒரு நாளைக்கு 2 வேளை உணவு கூட தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மே மாதம் 3-ம்தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதனால் தாங்கள் கடுமையாகப் பாதிப்பு அடைவோம் என்று கூறியும், தங்களைச் சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாந்த்ரா ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.

கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடியது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டம் நடத்திய தொழிலாளர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். 

நாட்டிலேயே அதிகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை உள்ளது. 

.