This Article is From Feb 04, 2020

‘டெல்லி ஷாஹீன் பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி உறுப்பினர் ’ – போலீஸ் தகவல்

கபில் குஜ்ஜார் என்ற 25 வயதான இளைஞர் ஒருவர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் போலீசார் அருகே நின்று கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் தான் ஒரு ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று ஷாஹீன் பாக்கில் கபில் குஜ்ஜார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

New Delhi:

டெல்லி ஷாஹீன் பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கபில் குஜ்ஜார் என்ற 25 வயதான இளைஞர் ஒருவர் ‘ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்துடன் போலீசார் அருகே நின்று கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் தான் ஒரு ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

போலீசாருக்கு அருகே நின்று கொண்டு வானத்தை நோக்கி 2 முதல் 3 முறை அந்த இளைஞர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் நின்று கொண்டிருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ‘எங்கள் நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும்' என்று அவர் கூறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

முதல்கட்ட தகவலின் அடிப்படையில் அந்த நபர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது போனை ஆய்வு செய்ததில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜ்ஜாரும் அவரது தந்தையும் ஓராண்டுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளனர்.

போனில் உள்ள புகைப்படங்களில் குஜ்ஜார் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான அதிஷி, சஞ்சய் சிங் உள்ளிட்டோருடன் நிற்கிறார்.

டெல்லியில் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த முக்கிய தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஷாஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 50 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த வாரம், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். தான் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு அவர் டெல்லிக்கு பேருந்தில் கிளம்பியுள்ளார். 

ஆட்டோ ரிக்சாவை பிடித்த அவர், ஷாஹீன் பாக்கிற்கு போக வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுனர் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவரை ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் அருசே நிறுத்தியுள்ளார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடந்து வருகிறது. பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மை மக்கள் மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியரிமை சட்ட திருத்தம் குடியுரிமையை வழங்குகிறது. இதில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படாததால் இந்த சட்டம் அவர்களுக்கு எதிரானது என்று கூறி போராட்டங்கள் நடக்கின்றன. 

டெல்லியில் நடைபெறும் போராட்டங்களில் ஷாஹீக் பாக் போராட்டம் முக்கிய போராட்டமாக பார்க்கப்படுகிறது. டெல்லி - நொய்டாவை ணைக்கும் முக்கிய சாலையில் கடந்த 50 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. 

.