This Article is From Oct 12, 2019

PM Modi-Xi Jinping meet: இன்றைய சந்திப்பில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம்!

’தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதத்தை’ பொதுவான சவால்களாக, எதிர்த்துப் போராட இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டன என அரசு நேற்று இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங்கின் நேரடி சந்திப்பைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

Mamallapuram:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இரண்டாவது கட்ட முறைசாரா சந்திப்பு இன்று நடைபெறுகிறது. இரு தலைவர்களும் நேற்றைய தினம் மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் மகாபலிபுரத்தின் கோயில்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

பின்னர் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தவர்கள், தொடர்ந்து, தமிழக பாரம்பரிய இரவு உணவுகளையும் உட்கொண்டனர். நேற்றைய சந்திப்பு, திட்டமிடப்பட்ட நேரத்தையும் கடந்து சென்றது. 

'தீவிரமயமாக்கல் மற்றும் பயங்கரவாதத்தை' பொதுவான சவால்களாக, எதிர்த்துப் போராட இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டன என அரசு நேற்று இரவு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.

அடுத்த ஆண்டு சீனா-இந்தியா உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி இரு நாட்டு மக்களும் கருத்து பரிமாற்றம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியதாக சீனாவின் அரசு ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங் ஆகியோரின் இன்றைய சந்திப்பு, தாஜ் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும் தங்கள் விரிவான பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து, தூதுவர்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

தொடர்ந்து, பிரதமர் மோடி ஜின்பிங்கிற்கு மதிய உணவை வழங்க உள்ளார். பின்னர் இந்த முறைசாரா சந்திப்பின் முடிவு குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிடுவார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழக  பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசினர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை, கண்டு பிரதமர்  மோடி கையசைத்து வியந்து ரசித்தார். அதனைபோன்று சீன அதிபரும் வியந்து கண்டு ரசித்தார்.

தொடர்ச்சியாக, அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை, ஐந்து ரதங்களின் சிற்பங்கள், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சுற்றி காட்டிய பிரதமர் மோடி, அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் விளக்கியுள்ளார். 

பின்னர், பிரதமர் மோடி நினைவு பரிசு வழங்கினார். நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு,  தஞ்சாவூர் நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 

ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, 'இந்தியாவுக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்' என்று கூறியது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த சீன அதிபர் காஷ்மீர் நிலைமையைக் கண்காணிப்பதாகக் கூறியதோடு, "முக்கிய நலன்களுக்காக" பாகிஸ்தானை ஆதரிப்பதாக இம்ரான் கானுக்கு உறுதியளித்ததாக தகவல்கள் வெளியானது. 

இதனிடையே, ‘காஷ்மீர் பிரச்சனையை இருநாடுகள் பேசி தீர்வுகாண வேண்டும்” எனச் சீன அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீனாவின் கருத்து குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் இம்ரான் கான் சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கிறது. 

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா ஒருபோதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, நிலையானது மற்றும் தெளிவானது. சீனாவும் எங்கள் நிலையை நன்கு அறியும் என்றார், மேலும், இது உள்நாட்டு விவகாரம். இந்த விவகாரத்தில் பிற நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

(With inputs from PTI)