This Article is From Nov 25, 2019

அஜித்பவார் வசம் இருந்த 4 எம்எல்ஏக்கள் மீட்பு: தேசியவாத காங்., தகவல்

Maharashtra News 2019: எப்போது வேண்டுமானாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்ற நிலையில், தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மக்களிடையே குழப்பத்தையும், தவறான உணர்வையும் உருவாக்கும் வகையில், அஜித் பவாரின் கருத்து - சரத்பவார்

Mumbai:

கடந்த சனிக்கிழமை அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றது முதல் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் டெல்லியில் இருந்து மீண்டும் மும்பை திரும்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து, 54 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 53 பேர் கட்சியுடன் தொடர்பில் உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு சில அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக அழைப்பின் பேரில் டெல்லி சென்றிருந்தனர். இந்நிலையில், அவர்களில் 3 பேர் அக்கட்சியின் இளைஞர் அணியினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் டெல்லியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மும்பை திரும்பியுள்ளனர். 

தொடர்ந்து, மற்றொரு எம்எல்ஏவும் டெல்லியில் இருந்து மும்பை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தேசியவாத காங்கிரஸின் 52 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 

இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இதனிடையே, எப்போது வேண்டுமானாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்ற நிலையில், தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. 

காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா, ஆட்சியமைக்க இருந்த நிலையில், ‘ராஜதந்திரத்தால்' பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி மலர்ந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்றுள்ளார். 

தற்போது அமைந்துள்ள மகாராஷ்டிர அரசுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான என்.வி.ரமணா, அஷோக் பூஷண் மற்றும் சஞ்சிவ் கண்ணா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம், இன்று காலை 10:30 மணிக்குள், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

.