‘’காங்கிரஸ் அழிவதற்கு சரியான நேரம் இதுதான்’’ – கடுப்பான ஆம் ஆத்மி தலைவர் விமர்சனம்!!

பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்ததை தொடர்ந்து மகாராஷ்டிராவில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரசின் நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘’காங்கிரஸ் அழிவதற்கு சரியான நேரம் இதுதான்’’ – கடுப்பான ஆம் ஆத்மி தலைவர் விமர்சனம்!!

288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 44 உறுப்பினர்கள் உள்ளனர்.

New Delhi:

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸின் நடவடிக்கைகளால் கடுப்பான ஆம் ஆத்மி கட்சி, ‘காங்கிரஸ் அழிவதற்கு சரியான நேரம் இதுதான்' என்று விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 24-ம்தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகின. அது முதற்கொண்டு ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளை கைப்பற்றின.

ஆட்சி, அதிகாரத்தில் பாதிப்பங்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பாஜக மீது குற்றம் சாட்டிய சிவசேனா, அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது.

முன்னதாக சிவசேனா ஆட்சியமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், பாஜக – சிவசேனா கூட்டணி முறிய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் சிவசேனா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

ஆட்சியமைக்க வேண்டும் என்றால் 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும், 56 + 54 = 110 எம்எல்ஏக்கள் பலம் போக, இன்னும் 35 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எனவே காங்கிரசின் ஆதரவு இல்லாமல் சிவசேனாவோ அல்லது தேசியவாத காங்கிரசோ ஆட்சியமைப்பது கடினம்.

இதற்கிடையே காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று காலையும், மாலையும் கூடி சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விவாதித்தது. ஆனால் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

சோனியா காந்தியை நேரில் சந்தித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு கேட்காவிட்டாலும், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டிருக்கிறார். சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், காங்கிரசின் மெதுவான நகர்வு காரணமாக ஆட்சியமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான ப்ரீத்தி சர்மா மேனன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே பிடிவாதத்துடன் மாநில கட்சிகளை ஒதுக்கியது. இதனால்தான் பாஜக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. இப்போது மெதுவான நடவடிக்கைகளால் மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த மெத்தனமான நடவடிக்கை அழிவுக்குதான் வழி வகுக்கும்.

மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும். காங்கிரஸ் கட்சி அழிவதற்கு சரியான நேரம் இதுதான்.

இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

.

More News