TN Rains: 'வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 விழுக்காடு அதிகம் மழை பெய்துள்ளது.
TN Rains: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் இன்னும் 24 மணி நேரத்தில் முற்றிலுமாக நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் தமிழக அளவில் 4 மாவட்டங்களில் மட்டும் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல இயக்குநர், புவியரசன், “கடந்த 3 மாதங்களாக தென்னிந்திய பகுதிகளில் நிலவிய வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் குறைந்துவிட்டதால், அடுத்த 24 மணி நேரத்தில் பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 2 விழுக்காடு அதிகம் மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடு மழை பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் 45 விழுக்காடும், தூத்துக்குடியில் 31 விழுக்காடும், கோவையில் 29 விழுக்காடும், புதுக்கோட்டையில் 27 விழுக்காடும் அதிக மழை பெய்துள்ளது.
குறைந்தபட்ச மழை அளவாக மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுவையில் சராசரியாக 24 விழுக்காடு குறைவு. அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும். காலை நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிப் பொழிவு காணப்படும்.
சென்னையைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 76 சென்டி மீட்டர் மழை பொழிவு என்பது சராசரி அளவு. ஆனால் நமக்குக் கிடைத்தது 64 சென்டி மீட்டர் மழை மட்டும்தான். சென்னைக்கு 16 விழுக்காடு மழை பொழிவு குறைவாகும்” என்று தெரிவித்துள்ளார்.