மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-
ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என மத்திய அரசு அறிவித்தவுடன் தமிழ்நாட்டில் அத்தகைய மருத்துவமனை அமைய வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதோடு மருத்துவமனைக்கு தேவையான மத்திய அரசு கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார்.
சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சுகாதார தரத்தை அடைய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் குறிக்கோள்.
சிறப்பான செயல்பாடுகளால் நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார தரம் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடு முதல் 3 இடங்களில் உள்ளது. ஐ.நா. சபை சுகாதாரம் தொடர்பாக நிலையான வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ளது. அதில் 2030-ம் ஆண்டுக்குள் தாய்மார்களின் பேறுகால இறப்பு விகிதத்தை 66-ஆக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை தமிழ்நாடு 2016-ம் ஆண்டிலேயே எட்டி விட்டது. இதற்காக தமிழகத்திற்கு மத்திய அரசின் விருதும் கிடைத்திருக்கிறது. இறந்தவர்களின் உடல் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இதற்காக தேசிய அளவில் வழங்கப்படும் விருதை கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் பெற்று வருகிறது.
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.