This Article is From Apr 11, 2019

ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல்? உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் பரபரப்பு கடிதம்!

உத்தரபிரதேசத்தில் ஆபத்தான வகையில் பாதுகாப்பு குறைப்பாடு இருந்ததாகவும், இதனால் அச்சுறுத்தல் காரணமாக நடுநிலையுடன் அரசு செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமேதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைவாக அளிக்கப்பட்டதாக புகார்.

New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அக்கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நேற்று அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ராகுலின் தலையை நோக்கி லேசர் கதிர் வீச்சுகள் வந்ததாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் ஆபத்தான வகையில் பாதுகாப்பு குறைப்பாடு இருந்ததாகவும், இதனால் அச்சுறுத்தல் காரணமாக நடுநிலையுடன் அரசு செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் என முதல்முறையாக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் அவர், கடந்த 4 -ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக, திறந்த வாகனத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின்போது ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோர் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது நெற்றியில் பச்சை நிறத்தில் ஒளி அடிக்கடி பட்டு மறைந்தது. பச்சை நிறத்திலான அந்த லேசர் ஒளி குறைந்த நேரத்தில் 7 முறை தெரிந்ததாகவும், இதில் 2 முறை அவரது தலையில் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான அஹ்மத் படேல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரண்டீப் சுர்ஜேவலா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் கடிதத்துடன் ராகுலின் பாதுகாப்பு குறித்த வீடியோவையும் இணைத்துள்ளனர். மேலும் அந்த கடிதத்தில் ராகுலின் வீடியோவை ஆய்வு செய்ததாகவும், அதில் அவர் மீது ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் குறி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமரான ராகுல் காந்தியின் தந்தை மற்றும் அவரது பாட்டி இந்திரா காந்தி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுபோன்ற அதிகப்படியான அச்சுறுத்தல் காரணமாக ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சகம், தங்களுக்கு எந்த ஒரு கடிதமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், சிறப்பு பாதுகாப்பு படையினரிடம் ஆலோசனை மேற்கொண்டதில், அந்த ஒளியானது செல்போன் வெளிச்சத்தில் இருந்து வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், எந்த பாதுகாப்பு குறைப்பாடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


 

.