கடந்த ஜூன் மாதம், மெஹ்பூபா முப்டியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியை பாஜக முறித்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது
New Delhi: ஜம்மூ காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரி, மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் ஜம்மூ காஷ்மீரில் சட்ட ஒழுங்கு சீராகியுள்ளது. எனவே அடுத்த 6 மாதத்தில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும்” என்று தகவல் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம், மெஹ்பூபா முப்டியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடனான கூட்டணியை பாஜக முறித்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“முன்னரெல்லாம் ஜம்மூ காஷ்மீரில் தேர்தல் நடந்தால், ரத்த ஆறு ஓடும். ஆனால் இந்த முறை நடந்த தேர்தலில் அப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அங்கு சட்ட ஒழுங்கு முறையாக உள்ளது. மக்களுக்கு அவர்களின் உரிமையை நாங்கள் வழங்கியுள்ளோம். அங்கு நிலவி வந்த பல பிரச்னைகள் ஒரே ஆண்டில் தீர்க்கப்பட்டன” என்று இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார் அமித்ஷா.
கடந்த மார்ச் மாதம்தான், காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டது. காஷ்மீரின் அனாந்த்நாக் தொகுதிக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.
இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து மேலும் பேசிய அமித்ஷா, “முன்னர் ரம்ஜான் பண்டிகை இருந்ததால், தேர்தல் நடத்தப்படவில்லை. பின்னர் அமர்நாத் யாத்திரை இருந்தது. தற்போது ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டால், அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும்” என்று பேசினார்.