This Article is From Jan 13, 2020

1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு ​​தொகுப்பை பெற இன்றே கடைசி நாள்!

இதுவரை ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் 686 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு ​​தொகுப்பை பெற இன்றே கடைசி நாள்!

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இதுவரை 95 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம், கடந்த 9ம் தேதி முதல் தொடங்கியது. தொடர்ந்து, 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. 

இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தபட்சம் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. எந்தெந்த தேதிகளில் எந்த தெருவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்து ரேஷன் கடையில் உள்ள நோட்டீஸ் பலகையில் எழுதி ஒட்டப்பட்டு, ஒருவர்கூட விடுபடாமல் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜர் கூறும்போது, தமிழகத்தில் 2 கோடியே 30 ஆயிரத்து 431 குடும்ப அட்டைகள் பொங்கல் பரிசு பெற தகுதி உள்ளவை என்றும், நேற்று மாலை 6 மணி வரை, ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் 686 குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மீதமுள்ள 10 லட்சத்து 59 ஆயிரத்தி 745 அட்டைதாரர்களுக்கு கடைசிநாளான இன்று பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். பரிசுத்தொகுப்பை வாங்காத அட்டைதாரர்களுக்கு, பரிசை பெற எஸ்.எம்.எஸ் மூலம் நினைவூட்டப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

.